நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னரை தொடர்புபடுத்தி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதால் கவர்னர் பணி செய்ய முடியாமல் தவிப்பதாக கூறி கவர்னரின் செயலாளர் சென்னை காவல்துறை ஆணையரிடம் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் உட்பட 35 ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 .10 .2018ல் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
9 .10 .2018 அன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியரை போலீசார் கைதுசெய்து எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆவணங்களையும் முதல் தகவல் அறிக்கையும் பார்வையிட்ட 13வது மாஜிஸ்திரேட் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்ய போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
இந்த, வழக்கில் பின்னர் மீதமுள்ள நக்கீரன் ஊழியர்கள் 34 பேரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நக்கீரன் ஆசிரியர் உட்பட 5 பேர் மீது ஜாம்பஜார் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த, குற்றப்பத்திரிகையின் படி தங்கள் மீதான வழக்கை நிரூபிக்கும் வகையில் சட்டப்படியான எந்த ஆவணங்களும் இல்லை. எனவே, தங்கள் மீதான வழக்கு செல்லாது என அறிவித்து ரத்து செய்யக் கோரி ஐந்து பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது.
இதை, எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கடந்த ஜூலை மாதம் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . பின்னர், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழக அரசு காட்டிய அதீத நடவடிக்கைகளால் விரைவாக அடுத்தடுத்த கட்டமாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்கக்கோரி நக்கீரன்கோபால் உள்ளிட்ட 5 பேரும் தாக்கல் செய்த மனு 2019 டிசம்பர்-6 உச்சநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் பத்திரிகையின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
தமிழக அரசின் தரப்பில் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நக்கீரன்கோபால் உள்ளிட்ட 5 பேரும் தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் வழக்கை நான்கு வாரங்களுக்குள் விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.