அண்மையில் சென்னை ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம் டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. அலுவலகம் சென்ற அவர் தி.மு.க. மீது குற்றச்சாட்டுக்களை வைத்தார். இந்தநிலையில் அவர் தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவித்தது.
கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க உள்ளனர் என்றும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன.
இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தூத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அந்த அற்பர்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டன். கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாகப் பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.
ஆகையால் என்னை கழகத்திலிருந்தும் தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.