தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14ம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்[பட்டு தனதுசொந்த ஊரான சேலத்திற்கு வருகை தந்தார். இரவில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கிய எடப்பாடி பழனிச்சாமி 15ம் தேதி காலை அம்மாபாளையம் வந்தார். இது எடப்பாடி அருகே தேவூர் என்ற கிராமத்திற்கு அருகே உள்ளது. இக் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் ஆலயத்தில் இருக்கின்ற ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயில் எடப்பாடி பழனிச்சாமியின் மாமனாரின் குலதெய்வ கோவில். இதற்காகவே தனது நிகழ்ச்சிகளை வடிவமைத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
குள்ளம்பட்டியில் மூதாட்டியிடம் கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட முதல்வர்

இந்த கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பழனிச்சாமியின் மனைவி ராதா, காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்த குடம் எடுத்து வந்து கோவிலில் பூஜை செய்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பழனிச்சாமி, ஞான தண்டாயுதபாணியிடம் மனம் உருக வேண்டியதோடு, அங்கிருந்த பொதுமக்களிடம் கலகலப்பாக பேசினார். அப்போது ஒரு மூதாட்டி, ’ஏம்ப்பா பழனிச்சாமி...நீ என்ன இந்த நாட்டுக்கே முதலமைச்சரா? எப்படி ஆனாய்..? என்று கேட்டார்.
அதற்கு பழனிச்சாமி, ‘எல்லாம் உங்களைப்போல உள்ள அம்மாவின் கருணையினால்....’என்றார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் பழனிச்சாமி தான் படித்த தேவூர் அரசுப்பள்ளிக்கு சென்றார். அங்கிருந்த மாணவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுவிட்டு திரும்பவும் தனது சொந்த கிராமமான, எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையாம் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, கட்சிக்காரர்கள், ‘அண்ணே...நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது இங்கு வந்து ஜாலியா இருக்குறீங்களே ..? என கேட்டார்கள்.
அதற்கு முதல்வர் பழனிச்சாமி, ‘என் மாமனார் குடும்பத்திற்கு நான் மரியாதை செலுத்தாமல் வேறு யார் செலுத்துவது? எனக்கு என் குடும்பம்தானே முக்கியம்’ என சிரித்தபடியே கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றுவிட்டார்.