இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் பல போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளது பிசிசிஐக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த மே 13ஆம் தேதி முதல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ சார்பில் விண்ணப்பம் பெறப்பட்டது. டி20 உலக கோப்பையோடு தற்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிய இருப்பதால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது வரை மூவாயிரத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கூகுள் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் குவிந்துள்ள விண்ணப்பங்களில் பல விண்ணப்பங்கள் போலி விண்ணப்பங்கள் என தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், தோனி, சேவாக் உள்ளிட்டோர் பெயர்களில் போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரதமர் மோடி பெயரிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரிலும் கிரிக்கெட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு போலி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது பிசிசிஐக்கே அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.