Skip to main content

வெள்ள நிவாரணத்தொகைக்கு டோக்கன்; அமைச்சர் உதயநிதி தகவல்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Minister Udhayanidhi information about providing token for flood relief fund

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில்,“மத்திய அரசு ஒதுக்கியுள்ள 450 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது. பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 6 ஆயிரம் ரூபாய் போதாது என விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தங்கள் நண்பர்களிடம் வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். .

சார்ந்த செய்திகள்