ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை நானும், பிரியங்காவும் மன்னித்துவிட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட ராகுல்காந்தியிடம், ராஜீவ்காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளை மன்னித்துவிட்டீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, ‘நாங்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக வருத்தம் கொண்டிருந்தோம் மற்றும் காயப்பட்டிருந்தோம். அதீத கோபத்துடனும் இருந்தோம். ஆனால், எப்படியோ மன்னித்துவிட்டோம், முழுவதுமாக மன்னித்துவிட்டோம். ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைவர் இறந்துகிடக்கும் புகைப்படத்தை டிவி நிகழ்ச்சியில் பார்த்தபோது எனக்குள் இரண்டு எண்ணங்கள் ஓடின. ஒன்று ஏன் இந்த மனிதரை இவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள். மற்றொன்று அவர் மற்றும் அவரது பிள்ளைகளை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டேன்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘என் பாட்டி தான் கொல்லப்படப்போவதாக என்னிடம் சொன்னார். என் தந்தை கொல்லப்படுவார் என்று நான் சொன்னேன். அரசியலில் யாருக்கும் தெரியாத மிகப்பெரிய சக்திகளை, மாற்றத்தை உண்டுபண்ணுவதற்காக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்புகளோடு மோதவேண்டி இருக்கும். அது உங்களை வெகுவாக காயப்படுத்தும்’ என்றும் பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மே21, 1991 அன்று தமிழ்நாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.