சட்டையை கழற்றி போட்டு வா நேருக்கு நேர் வா என்று போலீஸ் அதிகாரிக்கு சவால் விட்ட, முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார் என்று பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர், போலீசாரை மிரட்டும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது, என் ஜாதிக்காரன் மேல் கைவைதால் அவ்வளவுதான். நீங்க எல்லாம் போதை ஏற்றிக்கொண்டுதான் செய்வீங்க. நாங்க தூங்க எழுந்திருச்சதுமே செஞ்சிடுவோம். சட்டைதானே உங்களுக்கு அதிகாரம். அந்த சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோத தயாரா என காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விடுத்திருந்தார். மேலும், முதல்வரே நான் அடிப்பேன்னு பயப்படுகிறார். வேண்டுமென்றால் அவரிடமே கேட்டு பாருங்கள் என்று பேசினார்.
கருணாஸின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எங்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிந்ததால் ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். நான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கருணாஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல், அரசு அதிகாரியை மிரட்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட 6 பிரிவுகளில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.