மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அவ்வியக்கம் தெரிவித்துள்ளதாவது:
தூத்துக்குடி மக்கள் அமைதியாக நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மார்ச் மாதத்தில் பங்கேற்றதற்கும், சீர்காழியில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் பொது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்கும் வழக்குகள் பதியப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதில் குறிப்பாக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் திருமுருகன் காந்தியை சிறையில் வைப்பதற்கான காரணமாக, அவர் பேசியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியை தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். FIR-ல் உள்ள வார்த்தைகளை அப்படியே தருகிறோம்.
“இந்து மதத்தில் சமமாக உணவு உட்கார்ந்து சாப்பிட முடியாது. சாதிக் கட்டமைப்பால் சகோதரத்துவம் இல்லை என்றால் நியாயம், நேர்மை என்பது கிடையாது. இந்த சமூகம் அன்புக்கு எதிரானது. தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன். தோலிலிருந்து பிறந்தவன் சத்ரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் இப்படி இருக்கும் போது சமத்துவம் எப்படி வரும். இந்த படிநிலை உடைந்தால் மட்டும் தான் இந்த சமுதாயத்தில் சமத்துவம், சகோதரத்துவம் வரும்.
பிராமணன் நம்முடைய உழைப்பை திருடுகிறான். சூத்திரர்கள் பணம் வைத்து இருந்தால் பிராமணர்கள் கொள்ளையடித்துப் போகலாம் என மனுதர்மம் கூறுகிறது. பிராமணன் வந்து எது சொன்னாலும் அது சத்திய வாக்கு, அதனை யாரும் சந்தேகப்படக் கூடாது. பார்ப்பனர்கள் இந்தியா விடுதலைக்காக எவ்வித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. அடிபட்டு செத்தது எல்லாம் நம்முடைய ஆட்கள்.
இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ஒதுக்கப்பட்டவர்களுக்கும், கல்வியிலே பின் தங்கியவர்களுக்கும். அப்படி ஒரு வார்த்தை சேர்த்தால் தான் நம்மால் கல்வி கற்க முடிகிறது. அதை செய்து காட்டியவர் அம்பேத்கர். அவர் உழைத்து உழைத்து வாதம் செய்து பெற்றுத் தந்தார். அதை அழிப்பதற்கான வேலையைத் தான் பிஜேபி செய்து வருகிறது. நாம் பெற்ற உரிமைகளை மாற்றினால் திரும்பவும் நம்மை மனுதர்மத்தின் கீழே கொண்டுவர முடியும். அதற்குத் தான் புதிய கல்வி கொண்டுவருகிறான்.
100 வருசத்துக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டும் என்றால், சமஸ்கிருதத்தை படித்து பாஸ் ஆகினால் தான் மருத்துவப் படிப்பிற்கு போக முடியும். யார் படிப்பான் பார்ப்பான் தான் படிப்பான். நம்முடைய குழந்தைகள் சமஸ்கிருதம் படிக்காது. அதனால் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பான் அறிவாளி கிடையாது. சூழ்ச்சிக்காரன். அவன் நரி மாறிதான் வேலை செய்வான். மனுதர்மத்தில் ஒரு பார்ப்பான் சூத்திரனை கொல்வதற்கு ஒரு தவளையைக் கொன்றால் என்ன பாவமோ அந்த அளவுக்குத் தான் அவனுக்கு பாவம் என்று சொல்கிறது. ஒரு பார்ப்பானுக்கு செல்வம் வேண்டுமென்றால் சூத்திரனுடைய செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்று மனுதர்மம் சொல்கிறது.
200ரூபாய் 500ரூபாய் திருடுபவனுக்கு குண்டர் சட்டம், ஆனால் சங்கராச்சாரியாருக்கு குண்டர் சட்டம் கிடையாது. கொலை செய்தார் நாங்கள் கைது பண்ணிவிட்டோம் இல்லையா, உள்ளே போட்டு விட்டோமோ இல்லையா என்கிறார்கள். 100 ரூபாய் 200 ரூபாய் திருடுபவனை குண்டர் சட்டத்தில் போடுகிறாய், ஏன் சங்கராச்சாரியாரை குண்டர் சட்டத்தில் போட மாட்டியா. இந்த குண்டர் சட்டம் நம்மை ஒடுக்குவதற்காக மட்டுமே. பார்ப்பான் தண்டிக்கப்பட மாட்டான். அவனுக்கு எந்த ஒரு தண்டனையும் இருக்காது”
என இரு சாதியினரிடையே பிரச்சினையைத் தூண்டும் வகையிலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் பேசினார். இதுதான் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரும், அம்பேத்கரும் எழுதாத பேசாத எதை திருமுருகன் காந்தி பேசிவிட்டார்.
சாதிய ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் மனுதர்மம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கில்லையாம். அது இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டவில்லையாம். ஆனால் மனுதர்மத்தை எதிர்த்துப் பேசுவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்காம்.
இப்படித்தான் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது பொய் வழக்குகள் போட்டு அவரை நீண்ட காலம் சிறையில் முடக்க பாஜக-எடப்பாடி அரசுகளின் கூட்டணி சதி செய்து வருகிறது. இந்த சதியினை முறியடிக்கவும், ஜனநாயகத்தினை காத்திடவும் குரல் எழுப்புவோம் .
நின்றாலும், பேசினாலுமே வழக்கு என்றால் எங்கே இருக்கிறது ஜனநாயகம்?