நெல்லையில் உள்ள பாளையில் இன்று மதியம் சுமார் 4 மணியளவில் தொடங்கிய கலைஞரின் அரசியல் ஆளுமை அஞ்சலி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் 25 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பேசினர். அந்த கூட்டத்திற்கு கலைஞர் மேல் ஈர்ப்பு கொண்டவர்கள் அவரது திட்டங்களால் பயன் அடைந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் உட்பட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். அதோடு திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, அமைப்புச்செயலாளர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் திரண்டு வந்திருந்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கட்சித்தலைவர்கள் பேசினாலும் கலைஞரின் அரசியல் ஆளுமை பற்றி முத்தாய்ப்பாக பேசினர். இதில், குறிப்பிடும்படியாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, நான் 23 வருடங்கள் தலைவர் கலைஞருக்கு பாதுகாப்பாக இருந்துவந்தேன். இப்போது தலைவராகப்போகும் ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருப்பேன். எந்த காலத்திலும் எதற்காகவும் சமாதானம் செய்துகொள்ளாத கொள்கை கொண்டது திராவிட இயக்கம். ஆட்சியே பறிபோனாலும் மத்தியில் குவிந்து குடக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை அறிவித்தவர் கலைஞர். அதனால் அவரது ஆட்சியும் கலைக்கப்பட்டது. ஆட்சி பறிபோனாலும் கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர் கலைஞர். என்று கண்கள் கசிய பேசினார்.