நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் மற்றும் உடன்சென்ற பெற்றோர்களை அரவணைத்த மசூதி நிர்வாகம், பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மே 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வு நடைபெற்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டிருந்தன. இதனால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள ஆலுவா பகுதியில் உள்ளது வாடி ஹிரா மசூதி. இந்த மசூதிக்கு மிக அருகாமையில் உள்ள சிவகிரி பள்ளி மற்றும் அலம் பள்ளி ஆகியவை நீட் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தப் பள்ளிகளுக்கு தேர்வு எழுத வந்தவர்கள் வெயிலில் காத்திருப்பதைக் கண்ட மசூதி நிர்வாகம், அவர்களை உள்ளே அழைத்து உணவு, குடிநீர் வழங்கி அரவணைத்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதச்சென்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வாடி ஹிரா மசூதியில் உபசரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது தற்செயலாக உபசரிப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முறையான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டு பெற்றோர் மற்றும் மாணவர்களை காத்துள்ளனர். மதம், மொழி என எந்த பாகுபாடுகளும் இன்றி பெற்றோருக்கு உரிய உபசரிப்பைத் தந்த மசூதி நிர்வாகம் ஆயிரத்து இருநூறு பேரின் அன்பைப் பெற்றிருக்கிறது.