ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று (02-02-24) பதவியேற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஒரு சக்திவாய்ந்த பழங்குடித் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பா.ஜ.க ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட சதியை இந்த கைது நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. ஹேமந்த சோரன் எனது நெருங்கிய நண்பர். இந்த இக்கட்டான காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க அவருக்கு துணை நிற்பேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்த முக்கியமான போரில் ஜார்க்கண்ட் மக்கள் உறுதியாக அற்புதமான பதிலை வழங்கி வெற்றி பெறுவார்கள்” என்று கூறினார்.