இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில் இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா எம்.பி. பேசுகையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 பெரிய புயல்கள் தாக்கின” எனத் தெரிவித்தார்.
அதே போன்று வெள்ள நிவாரணம் கோரி திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியபோது மத்திய அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். அதற்கு டி.ஆர். பாலு, “மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இரு கட்சி உறுப்பினர்களும் மாறி மாறி முழக்கமிட்டதால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய வெள்ள நிவராணத்தை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.