ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த சூழலில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (31.01.2024) சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மேலும் ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை அடுத்து ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் இன்று (02.02.2024) பதவியேற்றுள்ளார். இவருக்கு அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.