கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக தெரிவிக்கிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை விரைவில் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், “வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தேமுதிக புதிய உத்வேகத்துடன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தமிழக சட்டமன்றத் தொகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் மண்டலத்திற்கு நான் தேர்தல் பொறுப்பாளராக உள்ளேன்.
32 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள இந்த மண்டலத்தில் 2011ல் 7 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். 2006ல் நடந்த தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நான் போட்டியிட்டேன்.
வேலூர் எனது சொந்த மாவட்டம் என்பதால் எப்போதும் வேலூர் மாவட்டம் மீது எனக்கு ஆர்வம் உண்டு. கட்சித் தலைவர் விஜயகாந்த் விருப்பப்படி கடந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டேன்.
இந்த முறை தேமுதிக தலைவர் வாய்ப்பு கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆம்பூரில் என்னை நீங்கள் பார்க்கலாம். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கிறது,” என்றார். ஆம்பூர் தொகுதியில் தான் போட்டியிடுவதையே, ‘அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆம்பூரில் என்னை நீங்கள் பார்க்கலாம்’ என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் எல்.கே.சுதீஷ்.