சென்னையின் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிரமான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில் பணிகள் இறுதித் தருவாயில் இருக்கும் நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அன்பரசன் இன்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ''கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இப்பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் பொழுது தினசரி 2,310 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
840 ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். பேருந்து நிலையத்தின் மருந்துக் கடைகள் ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறைகள், குடி நீர்வசதி, கழிவறை வசதி அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தீயணைப்புத் துறை வண்டிகளும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் பாதுகாப்பிற்காகவே தனி காவல் நிலையம் செயல்படும்'' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.