Skip to main content

மீண்டும் விவசாயிகள் மாபெரும் பேரணி! - தாங்குமா பா.ஜ.க. அரசு? 

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர வைத்தது மாபெரும் விவசாயிகள் பேரணி. கிட்டத்தட்ட முப்பதாயிரம் விவசாயிகளில் தொடங்கிய இந்தப் பேரணி, மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை அடைந்தபோது ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது. சுமார் 180 கிலோமீட்டர் தூரம் கால்கடுக்க நடந்த விவசாயிகள், தங்கள் கோரிக்கையை முழங்க அதிர்ந்துபோனது மகாராஷ்டிரா அரசு.

Kisan


இவ்வளவு பெரிய பேரணியை சற்றும் எதிர்பார்க்காத தேவேந்திர பட்னாவிஸ் அரசு, மூன்று மாதங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் பேரணி முடிந்து, ஒரு ஆண்டு கடந்தும் பட்னாவிஸ் அரசு தந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை.

 

எனவே, சென்ற முறை பேரணியை ஒருங்கிணைத்த அனைத்திந்திய விவசாயிகள் சங்கம், இந்தமுறையும் பேரணியை ஒருங்கிணைத்து இருக்கிறது. இம்முறை ஐம்பதாயிரம் பேர் நாசிக்கில் இருந்து கிளம்பி, பிப்ரவரி 27ஆம் தேதி மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை அடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் ஓய்வூதியம், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் பேரணி தொடங்கியுள்ளது.

 

ஏற்கெனவே, ஒருமுறை பட்னாவிஸ் அரசை ஆட்டம் காணச் செய்தது இந்தப் பேரணி. அதனால், தொடக்கத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், பேரணி குறிப்பிட்ட தேதியில் தொடங்கும் என அனைத்திந்திய விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அஜித் தவாலே கூறியிருக்கிறார் உறுதியாக; பேரணியும் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இந்தப் பேரணி ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்டம்காணச் செய்யும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சார்ந்த செய்திகள்