பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் கறுப்புக்கொடி ஏற்றியதை படம் பிடித்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தும் 5 மாவட்டங்களில் கறுப்பு கொடியேற்றி போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். அதன்படி இன்று, இந்த 5 மாவட்டங்களில் விவசாயிகள் அவர்களது நிலங்களில், வீடுகளில், கறுப்புக்கொடியெற்ற முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பெரும்பான்மையான இடங்களில் மிரட்டி ஏற்ற விடாமல் தடுத்தனர். அதையும் மீறி குறிப்பிட்ட அளவு விவசாயிகள் பயப்படாமல் கறுப்புக்கொடி ஏற்றி தங்ககளது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள சி.பி.எம் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்னர் வேங்கிக்கால் பகுதியின் சாலையோரம் கறுப்புக்கொடி ஏற்றும் வேளையில் 10 சிபிஎம் நிர்வாகிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனை கேரளாவின் ‘மாத்ரு பூமி’ தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் மாத்ரு பூமி, நிருபர் அனுப்ஜோஷ், ஒளிப்பதிவாளர் முருகன், தீக்கதிர் செய்தியாளர் ராமதாஸ் போன்றோர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா காவல்நிலைய போலீசார் கறுப்புக் கொடியேற்றக்கூடாது என அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை கறுப்புகொடி ஏற்ற விடாமல் தடுத்தனர்.
அந்தநேரத்தில், இந்த களேபரம் அனைத்தையும் படம் எடுத்துக்கொண்டிருந்த செய்தியளர்களை தடுத்த போலீசார் கறுப்புக்கொடி ஏற்றுவதை படம் எடுக்கக்கூடாது, செய்தியாக்க கூடாது என எங்கள் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். நீங்கள் அதை மீறியுள்ளதால் உங்களை கைது செய்கிறோம் என செய்தியாளர்கள் 4 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு அவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் கடும் டார்ச்சர் செய்துள்ளனர்.
இந்த சம்பவம், கேரளாவில் இருந்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள அதிகாரிகள் உளவுத்துறை மூலம் இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்களை மட்டும் விடுதலை செய்ய கூறியுள்ளனர். அதன்படி, 3 பேரும் செய்தி ஏதும் சேகரிக்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டு வெளியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தீக்கதிர் நிருபர் ராமதாஸ், சிஐடியூசி சங்கத்தை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.