அரசு வேலைக்குப் பணம் கொடுத்து ஏமாந்ததாக அவ்வப்போது செய்திகள் வரும். இருந்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இன்னமும் குறுக்கு வழியில் வேலை வாங்கிட வேண்டும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தச் செய்தியின் மூலம் தெரியவந்திருக்கிறது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த டெய்சி, தனது உறவினருக்கு அரசுப் பணிக்காக ஜார்ஜ் பிலிப் என்பவரை அணுகி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி.யில் தனது நண்பர் வேலை பார்ப்பதாக அளந்துவிட்ட ஜார்ஜ் பிலிப், ஒரு வேலைக்கு ரூ. 5 லட்சம் என 3 பேருக்காக மொத்தம் ரூ.15 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை. டெய்சி தொடர்பு கொண்டு பேசும்போது, “நான் வாங்கிய பணத்தைச் சென்னையைச் சேர்ந்த நாவப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டேன். இனி என்னை தொடர்பு கொண்டால் நடப்பதே வேறு” என்று மிரட்டலாகவும் பேசி இருக்கிறார்.
தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை லேட்டாக உணர்ந்த டெய்சி, இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ஜார்ஜ் பிலிப்பையும், நாவப்பனையும் கைது செய்திருக்கின்றனர். இருவரும் தங்களை அதிகாரிகள் என்று கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து அரசு முத்திரையிட்ட போலியான சிபாரிசு கடிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நாவப்பன் ஏற்கனவே இதேபோன்று மோசடி புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றவன். வெளியே வந்த பிறகும் ஆட்டத்தை அறங்கேற்றி இருக்கிறான். ஏமாறுகிறவன் இருக்கிற வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!