தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இரண்டாவது முறையாக 10 மசோதாக்களை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கடந்த 28 ஆம் தேதி ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு மசோதா ஆளுநர் மூலமாகத் திரும்ப அனுப்பப்பட்டால், அந்த மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் பின்னால்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். இங்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்” என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில், “இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளுநரின் அதிகாரத்தின்படி மசோதாவை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற அதிகாரம் உள்ளது. அந்த வகையிலேயே இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மசோதாக்கள் மீதான ஒப்புதல் வித் கெல்ட் (withheld) என முடிவு செய்யப்பட்ட பிறகு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கலாம். ஆனால் சட்டப்பேரவைக்கும் அனுப்பவில்லை.
குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால் ஆளுநர் மத்திய அரசின் நாமினி (nominee) என்பதை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் குழப்பம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு (11.12.2023) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.