காவல்துறையையும் நீதித்துறையையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் வீடியோ பொய் என்று மறுக்கிறார் ராஜா.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு மேடை அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஆவேசமாகி, அங்கிருந்த போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.
போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ பதிவு.
’’வெட்கமா இல்லையா... போலீசோட ஈரல் நூறு சதவீதம் அழுகிவிட்டது. நான் ஒவ்வொரு இந்துக்கள் வீட்டு வழியாகவும் போவேன். முடிந்தால் தடுத்துப்பாரு. ஹைகோர்ட்டாவது மயிராவது. இந்துவை டார்ச்சர் செய்யும் நீ இந்துவா? போலீஸ் மொத்தமும் ஊழல். டிஜிபி வீட்டில் ரெய்டு நடக்கிறது. வெட்கமா இல்ல... இந்துக்கள் என்ன அனாதையா? கிறிஸ்துவிடமும், முஸ்லீமிடம் லஞ்சம் வாங்கிட்டீங்க. நான் தர்றேன் உங்களுக்கு லஞ்சம். இந்துக்களுக்கு விரோதமா இருக்காதீங்க. இது தவறான கருத்து அல்ல. இந்த இடத்தில் நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீங்க யாரு. உங்க டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்த அன்று நீங்க எல்லோரும் யூனிபார்ம்-ஐ கழட்டி போட்டுவிட்டு வீட்டுக்கு போயிருக்க வேண்டும். நான் எப்படி கீழ நின்னு பேச... எனக்கு ஸ்டேஜ் வேணும். ஐகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது....’’என்று பேசியுள்ளார் எச்.ராஜா.
இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோ பொய் என்று மறுப்பு தெரிவித்துள்ளார் எச்.ராஜா.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்த எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் மெய்யபுரம் வீடியோ பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ’’நான் நீதிமன்றத்தை மதிப்பவன். நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்’’ என்று மறுப்பு தெரிவித்தார்.