பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது.
இது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, பேராசிரியர் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நிர்மலா தேவி கைது செய்ய இன்று மதியம் சென்றபோது, வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டுவிட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நிர்மலாதேவியின் கணவர் மற்றும் அவரது சகோதரர் உதவியுடன் மாலை 6.30 மணிக்கு மேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்கவிருக்கிறார்.