குட்கா ஊழல் குறித்த சி.பி.ஐ.விசாரணை சத்தமில்லாமல் வேகமெடுத்து வருகிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த மாதவராவை கைது செய்தது சி.பி.ஐ.! குட்காவை அனுமதித்ததில் தமிழக காவல்துறையின் கீழ்நிலை அதிகாரிகள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ.அதிகாரிகள், பலரிடமும் விசாரணை நடத்தியதையடுத்து, கடந்த வாரம் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் தினகரன், சி.பி.சி.ஐ.டி.துறையின் ஐ.ஜி. ஸ்ரீதர், இதே துறையின் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் ஆகிய 3 உயரதிகாரிகளை அழைத்து சுமார் 6 மணி நேரம் தனித்தனியாக விசாரித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தற்போதைய விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார், குட்கா உரிமையாளர் மாதவராவ் ஆகியோர் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு காவல்துறை உயரதிகாரிகளை குடைந்தெடுத்துள்ளது சி.பி.ஐ.! பல கேள்விகளுக்கு பதில் சொன்ன காவல்துறை உயரதிகாரிகள், ‘’ லஞ்சத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், லஞ்சம் விளையாடியது உண்மை ’’ என சொன்னதாக ஐ.பி.எஸ். வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.
இந்த நிலையில், குட்கா ஊழல் நடந்த காலக்கட்டத்தில் சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவு டி.சி.யாகவும் தற்போது மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் இருக்கும் வரதராஜுலுவையும் வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ.அதிகாரிகள். இவரிடமிருந்து பல விசயங்களை கறந்திருப்பதாக சொல்கிறது சி.பி.ஐ.வட்டாரம் ! இந்த நிலையில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கும், சென்னை மாநக காவல்துறையின் முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜுக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.ஐ. முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.