பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. நாம் தமிழ் நாட்டின் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் 22 நாட்கள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என அவை நடக்க முடியாத அளவிற்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.
அப்போது யார் நமக்கு குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்? நம் பிரச்சனையை தீர்க்க எந்த மாநிலமும் முன்வரவில்லை. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தமிழ்நாடு மக்களுக்காக, தமிழக விவசாய பெருமக்களுக்காக தொடர்ந்து 22 நாட்கள், நம் உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்ற நிகழ்வே முடங்கிவிடும் சூழ்நிலையயை ஏற்படுத்தினார்கள்.
அப்போது நமக்கு யாரும் துணை நிற்கவில்லை. அவர்களுடைய, மாநிலத்திற்கு பிரச்சனை என்றதும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். நம் மாநிலத்திற்கு பிரச்சனை வந்த போது யாராவது துணை நின்றார்களா? என கேள்வி எழுப்பிய அவர் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.