நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இருப்பினும் அங்கிருந்த கூட்ட நெரிசலால் அவ்விடத்தை விட்டு ஆம்புலன்ஸால் நகர முடியவில்லை. அதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்சிற்கு வழிவிடும் விதமாக உடனடியாக தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அதன் பின்னர் அம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வாணியம்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.