மோடி என்ற பெயருக்கு புதிய விளக்கம் தந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
காங்கிரஸ் கட்சியின் 84ஆவது தேசிய மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இறுதி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசிவருகின்றனர். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த மாநாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும், வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளன. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உரையில் முழுக்கமுழுக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளையே தெரிவித்திருந்தார்.
‘இந்த நாட்டை பெரிதும் நேசிக்கும் இஸ்லாமியர்களை இந்தியாவிற்கு அந்நியமானவர்களே.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். தமிழர்களின் அழகிய மொழியான தமிழை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கிறார்கள். வடகிழக்கு மக்களின் உணவு, உடை விவகாரங்களில் மூர்க்கமாக தலையிடுகிறார்கள்’ என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
What does Modi actually mean? The name Modi symbolises the collusion between India's biggest crony capitalists and the prime minister of India: Congress President Rahul Gandhi #CongressPlenarySession pic.twitter.com/tyVAqhswXe
— ANI (@ANI) March 18, 2018
காங்கிரஸ் கட்சியின் முந்தைய கால பிழைகள் குறித்து பேசுகையில், ‘முந்தைய காலங்களில் நமது தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவில்லை. நாம் மக்களின் வாழ்க்கைச்சூழலை குறைத்துவிட்டோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக்கூறிய அவர், ‘நாம் காங்கிரஸை மாற்றவேண்டும். நமது தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய சுவர் இருக்கிறது. எனது முதல் திட்டமே அந்த சுவரை தகர்ப்பதுதான். நான் நம் தலைவர்களிடம் அந்தச் சுவரை அன்பினால் தகர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இருக்கிறேன்’ எனவும் கூறினார்.
மேலும், ‘மோடி என்றால் உண்மையில் என்ன தெரியுமா? மிகப்பெரிய கொடூர முதலாளிகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கூட்டணியைத்தான் மோடி என்று அடையாளப்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கூட்டிச் செல்லும். ஆனால், நாம் மனிதர்களாயிற்றே.. தவறுகள் செய்ய நேரிடும். ஆனால், மோடி தன்னை மனிதன் என்று நினைக்காமல், கடவுளின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என கிண்டலடிக்கும் விதமாக பேசினார்.