டெல்லி உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி முரளிதரின் இடமாற்றம் நீதித்துறை வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
டெல்லி கலவரம் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய பாஜக அரசின் வழக்கறிஞரை நோக்கி பல கேள்விகளை நேற்று (26.2.2020) எழுப்பிய நீதிபதி முரளிதர், வெறுப்புணர்வைத் தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பஞ்சாப் நீதிமன்றத்துக்கு அவசரம் அவசரமாக இடமாற்ற செய்யப்பட்டார் முரளிதர். இந்த இடமாற்றம் நீதித்துறை வட்டாரங்களில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் அந்த நீதிபதி முரளிதர்?
நீதிபதி முரளிதர் தனது வழக்கறிஞர் பணியை 1984- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார். இதனையடுத்து 1987-ல் டெல்லி சென்ற முரளிதர், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார்.
உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவை குழுவில் வழக்கறிஞராக பணியாற்றியதுடன், அதே குழுவின் உறுப்பினராகவும் இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார் முரளிதர்.
மத்திய பிரதேசத்தில், போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நர்மதா அணை கட்டுமானத்தால் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நலனுக்காகவும் இலவசமாக வாதாடியவர்.
அதேபோல, பல்வேறு பொதுநல வழக்குகளிலும், மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளிலும் நடுநிலை அறிவுரையாளராக முரளிதரை பலமுறை நியமித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள முரளிதர், 2002 முதல் 2006 - ல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக நியமிக்கப்படும் வரை சட்ட ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகவும் செயல்பட்டார்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தது மத்திய அரசு. தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நிலையிலுள்ள மூத்த நீதிபதியாக இருக்கிறார் முரளிதர். அப்படிப்பட்ட மூத்த நீதிபதியைத்தான் அதிரடியாக இடமாற்றம் செய்திருக்கிறது அரசு. அவரது இடமாற்றம் பல்வேறு எதிர்மறை விமர்சணங்கள் எதிரொலிக்கச் செய்கிறது!