கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன் (வயது 21). இவர் சிதம்பரம் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரும் இவரது உறவினரான சிதம்பரம் அரங்கநாதன் நகரைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஜனனியும் (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசயம் ஜனனி வீட்டிற்குத் தெரிந்ததால் அவர்கள் ஜனனியைக் கண்டித்துள்ளனர். இதனால் ஜனனி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அன்பழகன் நடவடிக்கை சரியில்லாததால் ஜனனி அவரிடம் பேச மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அன்பழகன் அவ்வப்போது ஜனனியைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பின்னர் அதையும் மீறி அன்பழகன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் கடுமையாகக் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அவர் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தனது ஜனனியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் அன்பழகன் ஆயுதத்தால் தாக்க வந்ததாகவும் பாபு குடும்பத்தினர் அவரது கையை இரண்டையும் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த ஆயுதங்களால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வீட்டிலே இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்மந்தமாக பாபு (43), சத்தியா (37), ஜீவா (17) உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.