தமிழக பா.ஜ.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 06-ஆம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கியது. அதேசமயம் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் வேல் யாத்திரைக்கு தடை விதித்ததையடுத்து வேல் யாத்திரை தொடங்கிய தமிழக பா.ஜ.க மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டதால் தடையை மீறி, பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து ஒவ்வொரு ஊராக வேல் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எல்.முருகன் தலைமையில் ஐந்தாவது மாவட்டமாக கடலூரில் நேற்று (18.22.2020) வேல் யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நகரில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை கடலூரிலுள்ள ஒரு தனியார் உணவகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்ட வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய எல்.முருகன், "வேல் யாத்திரை அவசியமானது மட்டுமல்ல, அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தி இருக்கிறது. அந்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய கூட்டணியை சார்ந்தவர்களும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களிடையே காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்த யாத்திரை மூலம் கரோனா முன் களப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் கொடுப்பது, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என மூன்று நல்ல செயல்களை செய்கிறோம்.
அதேபோல மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். தி.மு.கவினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் மற்ற மொழிகளைப் படிக்கக்கூடாது என்பதற்காக நவீன தீண்டாமையை ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார், அவருக்கு சிலர் ஒத்து ஊதுகிறார்கள். நம்முடைய தாய்மார்களை கொச்சைப்படுத்துகிறார்கள். அவருக்கு தாய்மார்கள் பாடம் கற்பிக்க போகிறார்கள். தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு அவர்கள் சரியான பாடம் கற்பிப்பதற்காக நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் நடக்க இருக்கிறது. மு.க.ஸ்டாலினின் கனவு நிச்சயமாக நிறைவேறாது. உங்களுடைய கனவு கனவாகவே போய்விடும். தமிழர்கள் உங்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அதிகமாக இருப்பார்கள். நாம் சுட்டிக் காட்டுபவர்கள் தான் முதலமைச்சராக இருக்க முடியும். ஆகவே எத்தனை தடைகள், இடையூறுகள் வந்தாலும் நம்முடைய நோக்கம், எண்ணம், பார்வை அத்தனையும் நாம் சட்டமன்றத்துக்கு சென்றே தீர வேண்டும் என்பதுதான்" என்றார்.