Skip to main content

"மோடி விமானத்தில் பண மூட்டை" - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு...

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

stalin speech in vadalur

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாளை (04.04.2021) மாலையோடு பிரச்சாரங்கள் முடிவடைய இருக்கின்றன. நாளை மாலை ஏழு மணியோடு பிரச்சாரங்கள் முடிவடையும் சூழலில், வரும் ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

அப்போது பேசிய அவர், "தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா ஆகியோர் மாறி மாறி இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

 

இன்றைக்கு காலையில் ஒரு செய்தியைப் பார்த்து இருப்பீர்கள். என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள். அப்போதுதான் தி.மு.க. இன்னும் வலுப்பெறும். தி.மு.க. இன்னும் உணர்ச்சி பெறும். நாங்கள் என்ன அ.தி.மு.க.வா உங்கள் சோதனையைப் பார்த்துப் பயந்து மூலையில் உட்கார்ந்து கொள்வதற்கு? நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.

 

வருமான வரித்துறை சோதனை என்றால் என்ன தெரியுமா? வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்திருந்தால், அதைக் கணக்கில் காட்டாமல் இருந்தால் சோதனை செய்ய வேண்டும்.

 

ஆனால் அவர்கள், தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்.

 

இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோடி வருகின்ற விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். நாளைய தினம் அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

 

வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா?

 

பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா? என்று நான் கேட்கிறேன். அவர் இந்த நாட்டின் பிரதிநிதிதான், நானும் இந்த நாட்டின் பிரதிநிதிதான்.

 

தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் கருத்துக் கணிப்புகள் எல்லாம், தி.மு.க. தான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதைத் தாங்க முடியவில்லை. அவர்களுக்கு எரிச்சல் வந்து விட்டது. ஆத்திரம் வந்துவிட்டது. பொறாமை வந்து விட்டது. எப்படியாவது ஐந்தாறு சீட்டாவது வென்று விடலாம் என்று பா.ஜ.க. நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், நீங்கள் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் – பேரறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

மோடி அவர்களே… அமித் ஷா அவர்களே… உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

வருமான வரித்துறைச் சோதனை என்றால் கணக்கு வழக்கு தவறாக வைத்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன்பு சோதனை செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், தேர்தல் முடிந்த பிறகு செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அது எங்கள் கடமை. வருமான வரித்துறையை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனை இருக்கிறது. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

 

ஆனால் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நான்கு நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நம்முடைய தோழர்களை, அவர்கள் வேலையை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களை முடக்கி வைக்க வேண்டும், அவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நீங்கள் செய்தீர்கள் என்றால், அதற்கெல்லாம் அஞ்சி, நடுங்கி, மூலையில் முடங்குகின்ற கட்சி தி.மு.க. அல்ல. அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி இது. தலைவர் கலைஞரிடத்தில் பயிற்சி பெற்றவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

 

மோடி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். ஏற்கனவே தாராபுரத்தில் வந்து பேசி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரையில் இன்றைக்குப். பேசிவிட்டு சென்றிருக்கிறார். நான் தாராபுரத்தில் பேசிவிட்டுச் சென்றபோது ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன்.

 

2015-ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தீர்கள். அதற்குப் பிறகு நான்கு வருடம் கழித்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினீர்கள். ஒரு செங்கல் வைத்துவிட்டுச் சென்று விட்டீர்கள். இன்றைக்கு அந்தச் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு உதயநிதி ஊர் ஊராகச் சென்று காட்டிக் கொண்டிருக்கிறார்.

 

அவர் இன்றைக்கு என்ன பேசுகிறார் தெரியுமா? எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வருவது மட்டுமல்ல, சிறப்பாக இருக்கும் என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?

 

15 மாநிலங்களில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்ற எல்லா மாநிலங்களிலும் வேலையைத் தொடங்கி விட்டீர்கள். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி விட்டீர்கள். ஆனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் சிறப்பாகச் செய்வோம் என்று சொல்கிறீர்களே எப்படி? ஒரு சினிமாவில் வடிவேலு சொல்வார், ‘வரும் ஆனா வராது’ என்று, அதுபோலத்தான் இருக்கிறது.

 

அது மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார். அது என்ன எண்ணற்ற திட்டம். எய்ம்ஸ் திட்டமே சிரிப்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யோக்கியதை இல்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.