தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு ஏற்க மறுக்கிறது. காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர்ப்பங்கீடு விவகாரம் வலுத்து வரும் சூழலில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டியது கட்டாயமானது என கர்நாடகாவில் இருந்து ஒரு குரல் ஒலித்திருக்கிறது.
அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக மென்பொருள் நிறுவனம் நடத்திவந்தவர் தர்ஷன் புத்தனையா. இவர் மேலக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அரசியலில் களம்காண்பதற்காக அமெரிக்க தொழிலைக் கைவிட்ட தர்ஷன் புத்தனையா, உள்ளூர் மக்களின் செல்வாக்கு முழுமைக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். இத்தனை ஆதரவுகளும் தர்ஷனுக்குக் கிடைக்கக் காரணம் அவரது தந்தை புத்தனையாதான். 2013ஆம் ஆண்டு மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டதைக் கண்டு நெகிழ்ந்த தர்ஷன், தற்போது தானும் அரசியலுக்கு வர முடிவு எடுத்திருக்கிறார்.
புத்தனையா விவசாயிகளிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். விவசாயத்தை முன்னிறுத்தியே தனது அரசியலையும் அவர் மேற்கொண்டார். தனது தந்தையின் அரசியல் நோக்கம் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் பிரதிபலித்த நிலையில், 15 ஆண்டு கால அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து தேர்தலில் களம்காண்கிறார் தர்ஷன். காவிரி விவகாரம் தொடர்பாக பேசும் தர்ஷன், ‘காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இருமாநில விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அதன்மூலமாகவே பல பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் முடியும்’ என தெரிவித்துள்ளார்.
தர்ஷன் புத்தனையாவிற்கு உள்ளூரில் செல்வாக்கு அதிகமாக உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை மேலக்கோட்டை தொகுதியில் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.