கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 12,659 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தற்காலிக புயல் நிவாரணமாக 7,033 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும; 4 மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 2,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 47 ஆண்டுகளாக இல்லாத கனமழை பாதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்; தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததுள்ளது. அதனையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை டெல்லியில் இருந்து வரும் ஒன்றிய குழு இன்று ஆய்வு செய்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கணக்கிட இருக்கிறது. அதேநேரம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இருந்த நிலையில், இன்று மத்திய குழு ஆய்வு செய்ய இருப்பதால் நாளை தூத்துக்குடியில் தமிழக முதல்வர் வெள்ளத்தை ஆய்வு செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.