சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் 19.06.2020 அதிகாலை 00 மணி முதல் 30.06.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நடைமுறை அமலில் இருக்கும். இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை சாந்தோம், சென்னை சிட்டி சென்டருக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. (மேலே கேலரியில் படத்தில் காணலாம்). பெட்ரோல் நிரப்ப வந்த வாகனங்களுக்கு அங்கு உள்ள ஊழியர்கள் இன்று ஊரடங்கு என்பதால் பெட்ரோல் நிரப்பப்படாது என தெரிவித்து திருப்பி அனுப்பினர்.