நாட்டின் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திரமோடி.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்பின்னர் ராம்நாத்கோவிந்த், மோடிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும். இந்த பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டனர்.
வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.