Skip to main content

தேர்தல் அதிகாரிக்கு முன்பே தேர்தல் தேதியை அறிவித்த பா.ஜ.க. பிரமுகர்!

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

தேர்தல் அதிகாரி அறிவிப்பதற்கு முன்பாகவே தேர்தல் தேதியை பா.ஜ.க. பிரமுகர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்பதால், அதிக கவனம் பெற்றிருந்தது. தென் இந்தியாவில் மட்டும் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத பா.ஜ.க. இங்கும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் சூழலில், இந்தத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Amit

 

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை அறிவிப்பார் என தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் ஓ.பி.ராவத் தேர்தல் விவரங்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே, பா.ஜ.க. இணையதளப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 12 மற்றும் வாக்கு எண்ணிக்கை 18ஆம் தேதி நடைபெறும்’ என பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் இந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார்.

 

தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என்றாலும், ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அது இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக இந்த செயல்பாடு அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்