எடப்பாடி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டுமென்பது மு.க.ஸ்டாலினின் தேர்தல் திட்டமாக இருக்கிறது. இதனையறிந்து, எடப்பாடியை வீழ்த்த ஸ்டாலினிடம் சில யோசனைகளை சொல்லியிருக்கிறார் திமுக எம்.பி.யும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி.
சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்கும் ஒருவரை எடப்பாடிக்கு எதிராக களமிறக்கினால் அவரை எளிதாக வீழ்த்திவிடலாம் என்பது கனிமொழியின் யோசனை. அந்த வகையில், எடப்பாடியை அவரது சொந்த தொகுதியில் வீழ்த்த, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை எடப்பாடிக்கு எதிராக களமிறக்கலாம்.
கொங்கு வேளாள கவுண்டர் என்கிற பெரும்பான்மை சமூகத்தை வீழ்த்த, வன்னியர் என்கிற மற்றொரு பெரும்பான்மை சமுகத்தை வைத்துதான் வீழ்த்த முடியும். சேலம் மாவட்டத்தில் திமுகவுக்கு வீரபாண்டியார் வளர்த்து வைத்துள்ள வன்னியர் செல்வாக்கு, அவரது வாரிசுகளுக்கு முழுமையாக இருக்கிறது. அதனால், வீரபாண்டியாரின் மகன் பிரபுவை எடப்பாடிக்கு எதிராக போட்டியிட வைப்பதன் மூலம் எடப்பாடியை தோற்கடிக்க முடியும் என்று ஸ்டாலினிடம் யோசனைத் தெரிவித்திருக்கிறார் கனிமொழி.