
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தில் இசக்கிசங்கர் என்கிற வாலிபர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையின் ஊழியர். இவர் கடந்த 20ம் தேதி அன்று காலை ஆற்றுக்கு குளிக்கச்சென்றபோது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இசக்கி சங்கர் தன் வீட்டு அருகே உள்ள கல்லூரி மாணவி சத்தியபாமாவை இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருமித்த காதலர்களாக இருந்துள்ளனர். இவர்களது காதல் வெளியே தெரியவந்தபோது இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த ஆணவக்கொலை நடந்துள்ளது. இது தொடர்பான செய்தியினை கடந்த 20ம் தேதி அன்று நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்த ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் கல்லூரி மாணவியான சத்தியபாமாவின் தம்பி ஐயப்பன் என்பவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர். ஐயப்பன், கிராமத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர்.
இதனிடையே சத்யபாமா, இசக்கி சங்கர் படுகொலை செய்யப்பட்ட மறுநாள் 21ம் தேதி அன்று, பெற்றோர் விசாரணைக்காக காவல்நிலையத்தில் இருந்த நேரத்தில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து இன்று சில தகவல்களின் அடிப்படையில் போலீசார், ஐயப்பனை அதிகாலையிலேயே விசாரணைக்கு கொண்டு சென்றனர். அவரிடம் விசாரித்ததில் தானும் தனது வகுப்பை சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேரும் இசக்கி சங்கரை வெட்டி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட எஸ்பியான அருண்சக்திகுமார், ’’சிறுவனை விசாரித்தபோது, இரண்டு பைக்குகளில் ஐயப்பனும் அவனது வகுப்பு நண்பர்கள் ஐந்து பேரும் அன்றைய தினம் காலை அரிவாளோடு சென்றுள்ளனர். காரணம், அவனுக்கு(ஐயப்பன்) தனது சகோதரி மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் முடிப்பதில் விருப்பமில்லை. அந்த வெறியிலேயே இருந்திருக்கிறான். இது தொடர்பாக அவனது வகுப்புத்தோழர்களும் தூபம் போட, இவர்கள் ஐந்து பேரும் இசக்கி சங்கரை வெட்டிக்கொல்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் 20ம் தேதி அன்று காலையில் இசக்கி சங்கரை வழிமறித்து வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேரிடமும் நாங்கள் சந்தேகப்பட்டு துருவித்துருவி விசாரித்ததில், இவர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்தது, சரியாக இருந்தது. ஐந்து பேருமே குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆகவே, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், இந்த படுகொலை பின்னணியில் வேறு விசயங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. அது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தார்.