கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் முதலில் மக்கள் கையில் பணத்தைக் கொடுங்கள் என மத்திய அரசுக்கு அபிஜித் பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சிறிய வணிக நிறுவனங்கள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இந்நிலையில் கரோனாவுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த சில ஆலோசனைகளை, பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி வழங்கியுள்ளார்.
இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியுடன் காணொளிக்காட்சி மூலம் உரையாடிய அவர் மத்திய அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், "லாக்டவுனுக்குப் பின் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல மத்திய அரசு விரும்பினால், மக்கள் கைகளில் அரசு நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும். மக்கள் செலவழித்தால் பொருளாதார சுழற்சி உண்டாகும். எனவே பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களைச் செலவழிக்கச் செய்வதுதான் சிறந்த வழியாகும்.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்துக்கும் அதிகமான அளவு தொகையை, கரோனாவிற்குப் பிந்தைய பொருளாதாரச் சீர்திருத்தத்திற்காகப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாம் இன்னும் ஒரு சதவீத ஜிடிபி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். கடன் தவணைகளை இப்போது யாரும் செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்தது புத்திசாலித்தனமான ஒன்று. ஆனால் இதைவிட இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். அதாவது ஒரு காலாண்டுக்கான கடன் தொகை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்து, அந்தக் கடன் தொகையை அரசு செலுத்தி இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜி, பொருளாதாரத் துறையில் தனது சிறப்பான பங்களிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர். பிறப்பால் இவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.