Skip to main content

எடப்பாடி செய்யுற ஆட்சிக்கு இந்த விளம்பரம் தேவையா? கலாய்க்கும் விவசாயிகள்

Published on 16/06/2018 | Edited on 16/06/2018

காவிரி நதி நீர் பிரச்சனையில் நாம் என்ன செய்துவிட்டோம்? மேலாண்மை வாரியம் அமைச்சிட்டோமா? அல்லது குறுவைக்கு சரியான நேரத்தில் தண்ணீர் வாங்கிக்கொடுத்துட்டோமா? ஆறு ஆண்டுகளாக சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டோமா? கூலித்தொழிலாளிகளின் கண்ணீரை துடைத்துவிட்டோமா? எதுக்கு இவ்வளவு ஆடம்பரம், வெற்றிவிழா, பொதுக்கூட்டமெல்லாம்? என்று விவசாயிகளின் பேச்சாக இருக்கிறது.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் வரும் 18ம் தேதி காவிரி நதிநீர் மீட்பு போராட்டத்தின் வெற்றிவிழா பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். மாவட்ட அமைச்சரான ஒ.எஸ்.மணியன், கூட்டத்தின் நாயகனாக முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் ஆடம்பர விளம்பர பேனர்கள் குவித்து வைத்துள்ளனர். குறுகலான சின்னக் கடை வீதியை ஒரு வாரத்திற்கு முன்பே ஆக்கிரிமித்து மேடை அமைக்கும் பணிகளை துவங்கிவிட்டனர்.

 

 

 

ஏற்கனவே இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்டு தடையானது. மூன்றாவது முறையாவது வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்றும், கூட்டத்தில் பச்சை துண்டுகள் அதிகம் தெரியவேண்டும் என்றும் ஆள்பிடிக்கும் வேலையில் தனது சகாக்களை பணத்துடன் இறக்கிவிட்டிருக்கிறார் அமைச்சர் மணியன்.


இந்தநிலையில் கூட்டம் நடப்பதற்கு முன்பே, கூட்ட ஏற்பாடுகளை கண்டு விவசாயிகளும் பொதுக்களும் கொதிப்படைந்துள்ளனர்.

 

 

 

விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், “இந்த ஆட்சி எப்போது ஒழியும்னு நினைக்கும் அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார்கள். நியாயத்திற்கு போராடினால் துப்பாக்கியால் சுடும் அரசாகவும் கொலைகார, கொலைபழி சுமந்தம் அரசாகவும் இருக்கிறது, இவர்கள் காவிரி விவகாரத்தில் ஏதோ சாதித்துவிட்டதாக கோடிக்கணக்கில் செலவுகள் செய்து விழா எடுக்கிறார்கள். அந்த விழாவில எதை சாதனை என்று கூறுவார்களோ புரியிவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக குறுவையை இழக்க வைத்ததை சாதனை என்கிறார்களா? அல்லது ஏழாண்டுகளுக்கு மேலாக வேலையின்றி நூறு நாள் வேலையை நம்பியிருந்த மக்களிடம் இருந்து அந்த வேலையையும் பிடுங்க வைத்ததை சாதனையாக சொல்லப்போகிறார்களா? அல்லது வழக்கமாக திறக்க வேண்டிய தண்ணீரை எப்போது திறக்கபோகிறோம் என்கிற தகவலைகூட வெளியிடமுடியாத நிலையை சொல்லபோகிறார்களா? எதை சொல்வார்கள்? வழக்கப்படி அம்மா வசனம் பாட இவ்வளவு பெரிய விழாவா”  என்று நக்கலடிக்கிறார்கள்.

 

“கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஒருவருக்கு ஐந்து ரூபா காசு கொடுத்து, இந்த ஜோடிய பார்த்தா தில்லானா மோகானாம்பாள் படத்துல வர சிவாஜி, பத்மினி மாதிரி இருக்குன்னு சொல்லவைப்பார் செந்தில். அதை கேட்ட கவுண்டமணி, தில்லானா படம் பார்த்திருக்கியா என்று கேட்பார். ஐயோ நான் சொல்லல... அவருதான் காசுகொடுத்து சொல்ல சொன்னாரு என்பார் அந்த நடிகர், உடனே கவுண்டமணி, செந்தில் சட்டய பிடிச்சி, நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா என்பார். அதற்கு செந்தில் எல்லாம் ஒரு விளம்பரம் என்பார். அதுபோலத்தான் அதிமுக அரசின் நிலைமை இருக்கு. எங்கு பார்த்தாலும் போராட்டம், கொலை, கொள்ளை, நரக ஆட்சியாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் ஆட்சியை தக்கவைக்க மத்திய அரசின் காலடியில் கிடக்கிறது தமிழக அரசு. அதை மக்களிடம் மறைக்க கூட்டம் போட்டு காட்டுவது சரிதானா- என்றும் நக்கலடிக்கிறார்கள் மயிலாடுதுறை விவசாயிகள்.


 

சார்ந்த செய்திகள்