Skip to main content

உங்களால் தான் முதலமைச்சராக இருக்கிறேன்! நான் வீழ வேண்டுமென நினைக்கிறீர்களா?

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசை அலற விட்டிருக்கிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் மீது பேசிய டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், தமிழகத்தின் நலன்களை முன்னிறுத்தி பேசியதுடன் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மோடி செய்த தவறுகளையும் ஏமாற்றங்களையும் அம்பலப் படுத்தினர். தயாநிதிமாறனின் பேச்சில் ஆவேசம் தெறித்தது.

 

dmk



மைக் பிடித்த தயாநிதி,  தமிழகம் உங்களை (மோடி) புறக்கணித்திருக்கிறது. ஏன், தெரியுமா? தமிழகம் விரும்பாத அனைத்தையும் திணித்ததுதான். ஆட்சியைப் பிடித்ததால் பா.ஜ.க. பலம் பெற்றதாக நினைக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளின் பலவீனம் பா.ஜ.க. ஜெயித்தது'' என்றவர், தண்ணீர் பஞ்சத்தைப் போக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை'' என குற்றம் சாட்டியதுடன் ஊழலில் ஊறிப்போன அரசாக தமிழக அரசு இருக்கிறது. பதவியிலுள்ள அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் இருக்கின்றன. மக்களின் அரசாக செயல்படாமல் பா.ஜ.க.வின் அடிமையாக இருந்து தமிழகத்தை ஆள்கிறது'' என தயாநிதி ஆவேசப் பட்டபோது அ.தி.மு.க.வுக்காக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான பா.ஜ.க.வின் அர்ஜுன் ராம் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே தயாநிதிமாறன்,  அடிமைகளை காக்க வேண்டியது எஜமானர்களின் கடமையாச்சே'' என்றார். இதனால் சபையில் கூச்சல் எதிரொலித்தது.

 

dmk



இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. எம்.பி.க்கள், "தமிழகத்திற்கு எதிரான பா.ஜ.க.வின் எந்த நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது என தலைமையிடமிருந்து எங்களுக்கு உத்தரவு. அதனால்தான் துவக்கத்திலேயே தாக்குதலை ஆரம்பித்து விட்டோம் என்கின்றனர். நாடாளுமன்றம் முடிந்ததும் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர்பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்களுடன் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. அதில், தி.மு.க.வின் எதிர்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்கிறார்கள் டெல்லி தொடர்பாளர்கள்.

 

dmk



நாடாளுமன்றத்தைப் போலவே சட்டமன்றத்திலும், எடப்பாடி அரசுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளையும் தயாரித்து வைத்துள்ளது அறிவாலயம். எந்தெந்த பிரச்சனையை யார் யார் பேசுவது என எம்.எல்.ஏ.க் களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க.வின் கச்சேரி களைகட்டும்'' என்கிறார்கள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்துடன் 28-ந்தேதி சபை முடிந்ததும் மீண்டும் ஜூலை 1-ந்தேதி துவங்கும் சட்டமன்றம், 30-ந்தேதி வரை நடக்கிறது. இந்தச் சூழலில், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதியே எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு கோட்டையில் எதிரொலிக்கிறது.

 

admk



இது குறித்து விசாரித்தபோது, நடந்து முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மைக்குரிய வலிமையை எடப்பாடி அரசு பெற்றிருக்கிறது. அதனால் சபாநாயகருக்கு எதிரான தி.மு.க.வின் தீர்மானம் தோல்வியடையும். அதனால் தி.மு.க. தலைமை யோசிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சபாநாயகருக்கு எதிராக பிரயோகப்படுத்தும் அஸ்திரத்தை எடப்பாடி அரசை வீழ்த்துவதற்கு பயன்படுத்தலாம் என தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவதால் தி.மு.க. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை திரும்பப்பெற ஆலோசித்துள்ளது'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

தி.மு.க. தரப்பில் விசாரித்த போதும் இதே தகவல்களே எதிரொலிக்கின்றன. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடியிடம், ""சபாநாயகர் பதவியிலிருந்து என்னை விடுவித்து அமைச்சராக்கி விடுங்கள்'' என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் தனபால். இது ஒரு புறமிருக்க, ஆட்சியை கவிழ்ப்பதில் தி.மு.க. காட்டிய வேகத்தில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதாம். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் டிமாண்டுகளை முன்கூட்டியே நிறைவேற்று வதற்கு தி.மு.க. ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். இருப்பினும் முயற்சியை கைவிடவில்லை தி.மு.க.


அதிருப்தியிலுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிய எடப்பாடி, "உங்களால்தான் முதலமைச்சராக இருக்கிறேன். நான் வீழ வேண்டுமென நினைக்கிறீர்களா?' என உருக்கமாக கெஞ்சியிருக்கிறார். அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி மூவருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வியாழன் மாலை வரை அழைப்பில்லை.


இதுகுறித்து கலைச்செல்வனிடம் பேசியபோது, ‘சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு கோர்ட்டில் நாங்கள் ஸ்டே வாங்கியிருப்பதால் சட்டமன்ற நிகழ்வில் கலந்துகொள்ள தடையேதும் கிடையாது. முதல்வருக்கு எதிராகவோ அல்லது சபாநாயக ருக்கு எதிராகவோ தீர்மானம் கொண்டு வந்து அதில் வாக்கெடுப்பு நடக்குமேயானால் அதில் ஓட்டுப் போடும் உரிமையும் எங்களுக்கு இருக்கிறது'' என்கிறார். இப்படி பல்வேறு பரபரப்பான பிரச்சனைகளுடன் கூடும் சட்டமன்றத்தை எதிர்கொள்ளும் முதல்வர் எடப்பாடி, ஆட்சிக்கு ஆபத்து வராது என்பதில் நம்பிக்கையாக இருக்கிறார் என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள்.