மதுரையில் சற்று முன்பு தனது கட்சியின் பெயரான 'மக்கள் நீதி மய்யம்' என்பதை அறிவித்து கொடியேற்றி வைத்தார் கமல். அதைத் தொடர்ந்து மாநில பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமலையும் தமிழக மக்களையும் வாழ்த்திப் பேசினார்...
"தமிழகத்துக்கு ஒரு புதிய மாற்றம் ஏற்படும் தருணத்தில் இங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். ஆனால், இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் அதுவல்ல, அவர் நிஜ நாயகன் என்பதே. அவர் நேர்மையானவர், தைரியமானவர். இந்த தேசத்தின் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் கமலின் தைரியம் எனக்குப் பிடித்தது. நான் அவரையும் அவரது அணியையும் வாழ்த்துகிறேன். அதற்கு முன் தமிழக மக்களை வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஒரு நேர்மையான, நல்ல மாற்று கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் முக்கியமாக இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன, இரண்டும் ஊழல் கட்சிகள். இப்பொழுது உங்களுக்கு பெரிய வாய்ப்பு. அடுத்த தேர்தலில் நீங்கள் ஊழலில்லாத கட்சிக்கு வாக்களிக்கலாம். டெல்லியில் நாங்கள் ஒரு சிறிய கட்சி தொடங்கினோம். தொடங்கிய ஒரு ஆண்டிலேயே எழுபதுக்கு அறுபத்து ஏழு இடங்களில் எங்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள் டெல்லி மக்கள். காங்கிரசையும் பாஜகவையும் தூக்கி எறிந்தார்கள். தமிழக மக்கள் டெல்லி மக்களின் சாதனையை முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன்.
டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நேர்மையான அரசை நடத்துகிறோம். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், நேர்மையான அரசு இருந்தால் எதுவும் சாத்தியமே, எல்லாம் சாத்தியமே. இப்பொழுது டெல்லி அனைத்து துறைகளிலும் ஒரு முழுமையான மாற்றத்தை கண்டுகொண்டிருக்கிறது. உங்களது உற்சாகத்தை பார்க்கையில் தமிழகமும் சீக்கிரம் மாற்றம் காணப்போகிறது என்பதை உணர்கிறேன்.
தமிழக மக்களே, உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள். உங்களுக்குப் பள்ளிகள் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால், திமுக, அதிமுகவிற்கு வாக்களியுங்கள், மருத்துவம், மின்சாரம் வேண்டுமென்றால் கமலுக்கு வாக்களியுங்கள்.
டெல்லி மக்கள் ஒரு புதிய பாதையை அமைத்தார்கள். இப்பொழுது உங்கள் முறை, தமிழகத்தில் ஒரு நேர்மையான அரசை அமைக்க உங்களுக்கான வாய்ப்பு. டெல்லி மக்கள் சாதனையை முறியடியுங்கள். வணக்கம்!!!"