Skip to main content

அ.தி.மு.க.வினரை விரட்ட துவங்கிய எடப்பாடி...இது உண்மையா என சீறியிருக்கிறார் அமித்ஷா!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

வேலூரில் இரட்டை இலையில் போட்டியிடும் ஏ.சி.எஸ்.சை ஜெயிக்க வைப்பதில் முதல்வர் எடப் பாடியும் துணைமுதல்வர் பன்னீரும் திடீர் வேகம் காட்டுகிறார்கள். பன்னீரின் டெல்லி பயணத்திற்குப் பிறகே எடப்பாடியிடம் இந்த வேகம் அதிகரித் திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட விழாவில் கலந்து கொண்டதற்குப் பிறகு, அவரையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டு தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் ஓ.பி.எஸ். தமிழக அரசில் தங்களின் முகமாக ஓ.பி.எஸ்.சை பா.ஜ.க. வைத்திருந்தாலும், ஓ.பி.எஸ்.சின் விருப்பம் நிறைவேறாமலே இருந்தது.

 

admk



ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அப்படியே பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டவர்களையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். எடப்பாடியின் டெல்லி விசிட்டில் திட்டமிட்டே ஓ.பி.எஸ். தவிர்க்கப்பட்டார் என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்தது. இதனால், அந்த சமயத்திலேயே தனது விருப்பத்தை மீண்டும் அமித்ஷாவிடம் ஓ.பி.எஸ். நினைவுபடுத்தியபோது, "நேரம் வரும்போது நானே அழைக்கிறேன்' என அமித்ஷா சொல்லியதால் டெல்லிக்கு செல்வது குறித்த முயற்சியை கைவிட்டிருந்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 20-ந்தேதி முடிவடைந்த நிலையில் அன்று இரவு ஓ.பி.எஸ்.ஸை தொடர்புகொண்ட அமித்ஷா, டெல்லிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். மகிழ்ச்சி பொங்க, என்னென்ன பேச வேண்டும் என்பதை பட்டியலிட்டுக்கொண்டார் ஓ.பி.எஸ். அத்துடன் அரசியல் யூகங்களுக்கு இடம் கொடுக்காதபடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கேற்ப நிதித்துறை செயலர் கிருஷ்ணனையும் அழைத்துச் சென்ற பன்னீர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமித்ஷாவின் அலுவலகத்தில் கடந்த 22-ந்தேதி அவரை சந்தித்தார்.

 

admk



இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை தன்னுடன் வைத்துக் கொண்ட அமித்ஷா, கிட்டத்தட்ட 40 நிமிடம் ஓ.பி.எஸ்.சுடன் விவாதித்திருக்கிறார். அமித்ஷா அழைத்திருப்பதை எடப்பாடியிடம் சொல்லி விட்டு சென்னையிலிருந்து டெல்லிக்கு ஓ.பி.எஸ். கிளம்பியிருந்தாலும், அவரிடம் நீண்ட நேரம் அமித்ஷா விவாதிப்பதையறிந்து டெல்லி விசிட் டின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கும் என சென்னையில் இருந்த எடப்பாடி குழம்பிப் போயிருந்தார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.சிடம் டெல்லி விபரங்களை கேட்டறிந்ததற்கு பிறகே எடப்பாடியிடம் குழப்பம் மறைந்தது என்கிறது கோட்டைத் தரப்பு. அமித்ஷா-ஓ.பி.எஸ். சந்திப்பு குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ‘வேலூரில் அ.தி.மு.க. வேட்பாளராக ஏ.சி.எஸ். போட்டியிட்டாலும் அவரை தங்களுடைய வேட்பாளராகத்தான் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால் அவரது வெற்றியை எதிர்பார்க்கிறது. இதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் "மோடிக்கு எதிராக வீசிய அலைதான் தி.மு.க. கூட்டணியை 37 இடங்களில் ஜெயிக்க வைத்தது' என்பதைப் பொய்யாக்குவதற்காக வேலூர் வெற்றியை எதிர்பார்க்கிறார் அமித்ஷா.
 

admk



வேட்பாளர் ஏ.சி.எஸ்.ஸோ, "வேலூர் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறது' என்றும், அதனால், எடப்பாடியிடம் துரைமுருகன் வேலூரில் தி.மு.க. ஜெயிக்க அ.தி.மு.க. உதவ வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர் தலில் அ.தி.மு.க. ஜெயிக்க தி.மு.க. உதவி செய்யும் என்கிற ரீதியில் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டிருக்கிறார்' என்றும் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்திருக்கிறார். மத்திய உளவுத்துறை விசாரணையில், "அ.தி.மு.க.-தி.மு.க.விற்கிடையே அப்படி ஒரு சமரசம் இருப்பது உண்மைதான். எம்.பி. தேர்தல்ல தி.மு.க. பெற்ற வெற்றியை வேலூரில் தக்க வைத்து தன் தலைமையைப் பலப்படுத்திக்கொள்ள நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்' என தெரிவிக்கப்பட... இதையடுத்தே டெல்லிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப் பட்டார்.


அ.தி.மு.க.-தி.மு.க. சமரச திட்டத்தை ஓ.பி.எஸ்.ஸிடம் விவரித்து, "இது உண்மையா?' என சீறியிருக்கிறார் அமித்ஷா. இதனை ஓ.பி.எஸ். சற்றும் எதிர்பார்க்கவில்லை. "எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இல்லை ஜி. இருப்பினும் உங்கள் சந்தேகத்தை புறக்கணிக்கவில்லை, எடப்பாடியிடம் விசாரிக்கிறேன். தி.மு.க.விடம் அப்படி ஒரு தேர்தல் உறவு எடப்பாடிக்கு இருந்தால் அதனை கண்டிக்கிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்' என விசுவாசத்துடன் சொல்ல, "நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் நடக்கிற அனைத்து அரசியலும் எனக்கு வந்தபடிதான் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்கிற மாதிரி எது நடந்தாலும் டெல்லியின் முடிவு வேறு மாதிரி இருக்கும்' என ஆவேசப்பட்டிருக்கிறார் அமித்ஷா.

அப்போது, "நீங்கள் அமைதியாக இருங்கள். எப்போதும் உங்களுக்கு நாங்கள் விசுவாசிகள்தான்' என்றிருக்கிறார் ஓ.பி.எஸ். அதன்பிறகு அரசுக்கு தேவையான நிதியை பெறும் வகையில் சில கோரிக் கைகளை அமித்ஷாவிடம் விவாதித்த ஓ.பி.எஸ்., "டெல்லி ஆதரவுடன் சிறையிலிருந்து சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகப்போறதாகவும், வெளியே வந்ததும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்கவிருப்பதாகவும் தகவல் வருகிறது ஜி. அது உண்மையா? உண்மையானால் உங்களையே நம்பியிருக்கும் என் நிலை என்ன?' என்று ஆதங்கத்துடன் ஓ.பி.எஸ். கேட்க, "எங்களை நம்புகிறீர்கள்தானே. உங்களை கைவிட மாட்டோம்' என சொல்லியிருக்கிறார் அமித்ஷா'' என விவரித்தனர் டெல்லி சோர்ஸ்கள். சென்னை திரும்பியதும் எடப்பாடியை சந்தித்து டெல்லியில் அமித்ஷா ஆவேசப்பட்டதை முழுமையாக ஓ.பி.எஸ். விவரித்திருக்கிறார். இதனையடுத்தே வேலூரில் அ.தி.மு.க.வினரை விரட்ட துவங்கியிருக்கிறார் எடப்பாடி.