ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டத்தை கர்நாடகாவில் தொடங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க. புதைசேற்றில் சிக்கியிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இந்தச் சேற்றிலிருந்து எடியூரப்பா எப்படி மீள்கிறார்? அல்லது எடியூரப்பாவையும் பா.ஜ.க.வையும் எதிர்க்கட்சிகள் எப்படி புதைசேற்றில் சிக்கவைக்கப் போகின்றன என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.
116 எம்எல்ஏக்களை கையில் வைத்திருக்கிற காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணியை ஒதுக்கிவிட்டு, 104 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கிற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்கஅழைத்திருப்பதன் மூலம், அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலையை கவர்னர் வஜுபாய் வாலா நடத்தியிருக்கிறார்.
இதை எதிர்த்து இரவோடிரவாக உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் கட்சி நாடியது. ஆனால், அங்கும் எடியூரப்பா பதவிஏற்புக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும், அவருடைய பதவியேற்பு இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதாவது வெள்ளிக்கிழமை இதுதொடர்பான இறுதித்தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்குள் முழுமையான முதல்வராகவே மாறிவிட்டார் எடியூரப்பா. பதவியேற்றவுடன் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். தனது பதவியே உறுதியாக இல்லை. அதற்குள் அவருடைய இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் பா.ஜ.க.வினருக்கு உரைக்கவா போகிறது…
இப்படிப்பட்ட நிலையில்தான், காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். தங்களுடைய எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் முதல் வேலை என்று கூறியிருக்கிற குமாரசாமி, பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத போக்கை கண்டிக்க எதிர்க்கட்சி முதல்வர்களிடம் ஆதரவு கேட்டிருப்பதாக கூறினார்.
பா.ஜ.க.வின் ஜனநாயகப் படுகொலையை மக்களிடம் கொண்டு செல்வோம் என்று காங்கிரஸும் ம.ஜ.த.வும் கூறியிருக்கின்றன. இதோபோன்ற ஜனநாயகப் படுகொலை 1982ல் ஆந்திராவில் நடைபெற்றது. பெரும்பான்மை பலத்துடன் இருந்த ராமராவ் ஆட்சியை வெறும் 10 பேருடன் பிரிந்த பாஸ்கரராவைக் கொண்டு கவிழ்த்தது காங்கிரஸ். அதை எதிர்த்து தனது எம்எல்ஏக்களுடன் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். தினமும் 100 முதல் 120 கிலோமீட்டர் வரை அவர் பயணம் செய்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
கடைசியில் குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே தனது ஆதரவு எம்எல்ஏக்களின் பலத்தை நிரூபித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்தார். அந்த நிகழ்வு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட உதவியாக அமைந்தது. தேசிய முன்னணியை அவர் அமைக்க அதுவே அடித்தளமாக இருந்தது.
அதுபோல, தங்களுடைய எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு கர்நாடகா முழுவதும் பயணத்தை மேற்கொள்ள சித்தராமய்யாவும் குமாரசாமியும் திட்டமிட வேண்டும். அல்லது இந்தியா முழுவதுமிருந்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, ஆதரவு எம்எல்ஏக்களை மக்கள் மத்தியில் நிறுத்தி பா.ஜ.க.வின் கேவலமான பதவி வெறியை அம்பலப்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பா.ஜ.க.வை எதிர்வரும் தேர்தல்களில் துடைத்தெறிய கர்நாடகம் நல்லதோர் தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.