இந்தியாவில் தண்ணீரை அரசாங்கமே விற்கத் தொடங்கியது தமிழகத்தில் தான். தற்போது வேறு சில மாநில அரசுகள் விற்பனை செய்கின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் உலகில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது போல அதிக விலைக்கு தண்ணீரையும் விற்பனை செய்யும் காலம் வரும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதனை 30 ஆண்டுக்கு முன்னர், 'தண்ணீர் தண்ணீர்' என்கிற பெயரில் இயக்குநர் பாலச்சந்தர் படம் எடுத்து மக்கள் தண்ணீருக்காக படும் அவலங்களை காட்சிப்படுத்தியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இருந்ததை விட இப்போது தண்ணீருக்காக மக்கள் படும் துன்பம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. தமிழகம் பரவாயில்லை என்ற நிலை தான். கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களான குஜராத், மகாராஷ்ட்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் ஒரு குடம் குடிநீருக்காக தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை தொடர்ந்தபடிதான் உள்ளது.
ஒரு மனிதனுக்கு அன்றாட தண்ணீர் தேவை 140 லிட்டர். ஆனால் இந்தியாவில் கிடைப்பதோ வெறும் 27 லிட்டர் தான். தென்னாப்பிரிக்கா, அரபு நாடுகளில் இது கூடக் கிடைப்பதில்லை என்பது வேதனையானது. உலகில் சில நாடுகளில் பெட்ரோல், டீசலை விட குடிதண்ணீரின் விலை அதிகம்.
உலகில் தென் ஆப்ரிக்காவிலுள்ள கேப்டவுன் நகரத்தை தண்ணீர் இல்லாத நகரமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த நிலை உலகின் பல நாடுகளுக்கும் விரைவில் வரும் என எச்சரிப்பதோடு, உலக நாடுகளுக்குள் மூன்றாவது உலகப்போர் மூளும் என்றால் அது தண்ணீருக்காக தான் என்கிறார்கள் வல்லுநர்கள்.
உலகம் 70 சதவிதம் நீராக உள்ளது. அதில் 97.5 சதவிதம் கடல் நீர். மீதியுள்ள 2.5 சதவித நீரே நல்ல நீராக உள்ளது. அதில் 0.3 சதவித நீரையே மக்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் அந்த 0.3 நீரில் வெறும் 5 சதவிகிதமே சுத்தமானது, மீதி 95 சதவிகிதம் சுகாதாரமற்றது என்கிறது உலக சுகாதார நிறுவனம். தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளன. அதோடு புகை மாசுக்கள் ஓசோன் மண்டலத்தை பாதித்துள்ளன. இதனால் பொழியும் மழையும் நச்சாகவே உள்ளது. அதோடு, பொழியும் மழை நீரை பாதுகாப்பதில்லை உலகின் பெரும்பாலான நாடுகள். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மக்களிடம் நீர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிஞர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
1992ல் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மார்ச் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்துள்ளது. 1993 முதல் உலக நாடுகள் உலக தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், குடிநீரை வீணாக்ககூடாது, விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்துக்கு மாற வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தண்ணீர் தேவை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தற்போது உலகில் பல நாடுகளில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கங்களும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஓரளவு ஈடுப்படத் தொடங்கியிருக்கின்றன என்பது ஆறுதலென்றாலும் இது காலம் கடந்த செயலே...