ஏப்ரல் 23 -உலக புத்தக நாள்
இன்று உலக புத்தக நாள். இதைப்பற்றி நாம் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் முதல் சாமானியர் வரை எந்த மாதிரியான வாசகர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் என்பது நமக்கத் தெரிந்ததுதான். புத்தகத்தையே தனது பொருளாதாரமாக, வாழ்க்கையாக ஆக்கிக்கொண்ட புத்தக விற்பனையாளர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் எனத் தோன்ற... சென்னையில் பெரிய பின்புலம், புத்தக பாரம்பரியம் என்றில்லாமல் தானே புத்தக கடையைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திவரும், அதே நேரத்தில் இலக்கிய வட்டத்திலும் பிரபலமாக இருக்கும் "டிஸ்கவரி புக் பேலஸ்" வேடியப்பனிடம் பேசினோம்.
புத்தகம் உங்கள் வாழ்க்கையில் அறிமுகமானது எப்போது, எந்தவழியில், முதல் புத்தகம் என்ன?
தருமபுரி பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில்தான் நான் வசித்தேன். எனக்கு புத்தகங்கள் அறிமுகமானதே ஒரு சுவாரசியமான விஷயம்தான். எனது அண்ணன் போக்குவரத்து தொழிலாளராக வேலை பார்த்தார். அவர் தொழிற்சங்கத்திலும் இருந்தார். அப்போது அவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார். வரும்போது அவர் அங்கு படித்த செம்மலர், மார்க்சிஸ்ட் புத்தகங்கள் போன்றவற்றை படிப்பார். அதை ஊருக்கு வரும்போது என்னிடம் கொடுத்து படிக்க சொல்வார். அப்படித்தான் எனக்கு புத்தகங்கள் அறிமுகமானது.
முதல் புத்தகம் கொடுத்த அனுபவம்?
எனக்கு அந்த புத்தகம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. புதிய உலகிற்கு கூட்டிக்கொண்டு சென்றது. மிகப்பெரிய விஷயங்களைக்கூட சுலபமாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அது உலக அரசியலை பேசியது, சிறந்த படைப்பிலக்கியமாக இருந்தது, அப்போது வந்த படங்களைப் பற்றிய விமர்சனங்களும் இருந்தது. அந்த விமர்சனங்கள் மற்ற விமர்சனங்களைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது. அதன்பின் நான் புத்தங்களை தேடி படிக்க தொடங்கினேன். அதன்பின் "சிற்பியே உன்னை செதுக்குகிறேன்" என்ற புத்தகம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கிடைத்தது. அதுவரை பாடநூல்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு அது ஒரு பெரிய மனமாற்றத்தை உண்டாக்கியது. நான் அந்த புத்தகத்தை பலருக்கு பரிந்துரைத்திருக்கிறேன்.
<
எப்போது புத்தகத்தை உங்கள் வாழ்வாக, தொழிலாக ஆக்கிக்கொண்டீர்கள், எப்படி அந்த முடிவை எடுத்தீர்கள்?
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு சினிமாவிற்கு செல்லவேண்டும், இயக்குனர் ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஒரு பட்டம் படித்து முடித்துவிட்டு சென்றால் நன்றாக இருக்குமே என்று தமிழ் இலக்கியம் படித்தேன். அதை முடித்துவிட்டு தரமணியில் உள்ள டி.எப்.டி.க்கு சென்றேன். அப்போது எனக்கு தெரியாது. நான் சரி கல்லூரியில் சேர்ப்பதுபோல் சேர்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் அப்போது அங்கு 12 பேரை மட்டுமே எடுத்தார்கள். அதில் நான் இடம்பெறவில்லை. இது போனால் என்ன என்று, உதவி இயக்குனராக சேரலாம் என நினைத்து திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தேன். அங்கு கார் பார்க்கிங்கில்லெல்லாம் ரஷ்ய புத்தகங்கள், முக்கியமான தமிழ் நாவல்கள் அதுமாதிரியான புத்தகங்களெல்லாம் நிறைய கிடைத்தது. நிறைய வாங்கி படித்தேன். படிக்கும்போது என்னுடைய சினிமா பார்வை மாற ஆரம்பித்தது. நிறைய கற்றுக்கொண்டேன்.
காலப்போக்கில் அப்படியே கோடம்பாக்கத்திற்கு மாறினேன். அங்கு இதுமாதிரியான புத்தகக் கடைகளே இல்லை. டி.நகர் போகவேண்டும். அங்கும் இயல்பான புத்தக நிலையம் இருக்காது. நிறைய பணம் இருந்தால் மட்டுமே செல்லமுடியும். அங்கு கிடைத்ததுபோல் இங்கு கிடைக்கவில்லையே என்ற ஒரு எண்ணம், வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. இயக்குனரான பின்பு ஒரு புத்தகக்கடை வைக்க வேண்டும். முக்கியமாக சினிமா சம்மந்தப்பட்டவர்கள் படிக்க ஒரு வசதி செய்து தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கொஞ்சம் பணம் வந்த பின்பு அதை ஏன் இப்போதே வைக்கக்கூடாது என்று ஆரம்பித்தேன். இதற்கு என் தம்பியும் உறுதுணையாக இருந்தான். அப்படிதான் ஒரு புத்தகக்கடையை ஆரம்பித்தேன். புத்தகத்தை ஒரு தொழிலா ஆரம்பித்து நடத்த முடியும்னு நம்பி செய்தேன். செய்துகொண்டு இருக்கிறேன். இப்போ அது நல்லாவே போய்ட்டு இருக்கு.
புத்தகம் உங்கள் வாழ்வில் கொடுத்தது என்ன, எடுத்தது என்ன?
எனக்கு வாழ்க்கையில் கொடுத்தது என்னன்னா மதிப்புமிக்க அறிமுகங்கள். எழுத்தாளர்கள் முதல் அனைத்து பிரபலங்களும், குறிப்பாக நான் யாரையெல்லாம் பார்த்து சினிமாவிற்கு வந்தேனோ, அவுங்களெல்லாம் அங்க வந்தாங்க. பாலு மகேந்திரா உள்ளிட்ட பலரும் டிஸ்கவரி புக் பேலஸ்க்கு வந்திருக்காங்க. சினிமால இருக்குறவங்க நிறைய படிக்கணும். அவங்களுக்கு படிக்க நிறைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு நினைச்சேன். அதேமாதிரி நடந்திருச்சு. இது புத்தகங்கள் எனக்கு கொடுத்த பரிசு. புத்தகங்கள் என் வாழ்க்கைல இருந்து எடுத்துக்கிட்டதுனா சினிமாவ என்கிட்ட இருந்து எடுத்துகிச்சு, ஏன்னா நான் சினிமாவுக்காகதான வந்தேன். அத இன்னும் என் கைல கொடுக்கவே இல்ல. அதுக்கப்பறம் அதிக நேரம், உழைப்பு. மற்ற தொழில்கள்ல கொஞ்சநாள் உழைத்ததுக்கு அப்பறம் ஒரு வளர்ச்சி இருக்கும். திரும்ப அதுக்கு உழைக்கணும், அப்படித்தான் இருக்கும். ஆனால் இங்க ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒரு சின்ன நிகழ்ச்சிக்குகூட நம்மள அதிகமாக வேலை வாங்கும். நமது நேரத்தையும் அதிகபட்சமான உழைப்பையும் எடுத்துக்கொள்கிறது.
புத்தக விற்பனை இலாபகரமானதா?
என்னைப் பொறுத்தவரைக்கும் இலாபகரமானதாகதான் இருக்கு. ஆனால் இது எல்லாருக்கும் இலாபகரமானதாக இருக்குமா அப்படினு கேட்டா தெரியல. எல்லா தொழில்களிலும் ஒரு 50 முதல் 70 சதவீத கடைகள் இலாபகரமானதாகதான் இருக்கும். மீதி கொஞ்சம் முன்ன, பின்ன இருக்கலாம். ஆனால் புத்தக கடைகளை பொறுத்தவரைக்கும் நூற்றுக்கு இரண்டு அல்லது மூன்று சதவீதம்தான் இலாபகரமானதாக இருக்கிறது. என்னைப்பொறுத்தவரைக்கும் ஓகே கொஞ்சம் இலாபகரமானதாகத்தான் போய்கிட்டு இருக்கு. மொத்தமாக பார்த்தால் கஷ்டம்தான்.
வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். நான் சொல்வது இலக்கியம் சார்ந்ததாக இருக்கும். டிஸ்கவரி புக் பேலஸில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் விற்பனையான நாவல் குற்றப்பரம்பரை நாவல். அதுக்கப்பறம் கரமுண்டார் வீடு. இந்த இரண்டும் முக்கியமானது. அதுக்கப்பறம் நூறு சிறந்த சிறுகதைகள். தமிழில் வாசிக்க தொடங்குபவர்கள் எல்லா எழுத்தாளர்களையும், அவர்களின் மனநிலையையும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை படித்தாலே போதும். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். அதுக்கப்பறம் விடியல் பதிப்பகத்தோட பெரியார் அன்றும் இன்றும், அம்பேத்கர் அன்றும் இன்றும் தேர்ந்தெடுத்த பகுதிகளை வாசகர்களுக்காக தொகுத்திருக்காங்க ஏன்னா அவங்க எழுதிய புத்தகங்கள் மலை மாதிரி குவிந்திருக்கும். அந்த அனைத்து புத்தகங்களையும் படிப்பது என்பது எல்லாருக்கும் சாத்தியமா என்பது தெரியவில்லை. அதை தேர்வு பண்ணி தராங்க அப்படிங்குறது நல்ல விஷயம்தான்.