சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் கமலின் 60ம் ஆண்டு திரைவிழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர், " முதலில் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துவிடுங்கள், பிறகு தம்பிகளுக்கு வழிவிடுங்கள்" என்று கூறியிருந்தார். அவரின் அந்த பேச்சு அடுத்த சில வாரங்களுக்குத் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானது. இந்நிலையில் இதுதொடர்பாக அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய இந்த கேள்விக்கு அவரின் எதார்த்தமான பதில் வருமாறு, " நான் அந்த விழாவில் அப்படி பேசியது உண்மைதான். ஆனால் எதற்காக பேசினேன் என்று பார்க்க வேண்டும். காமராஜருக்குப் பிறகு ஏதோ ஒரு வகையில் சினிமாவை பின்புலமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் ஆட்சியிலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் அது எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் தான் அப்படிக் கூறினேன்.
ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. இதை விஜய்யை மனதில் வைத்துக் கூறினேனா என்று கேட்கிறீர்கள், அப்படி இல்லை, அனைத்து ஜூனியர் தம்பிகளும் களத்திற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் நான் சினிமாக்காரன். எதார்த்தமாக யோசிக்கக்கூடியவன். அந்த வகையில் ரஜினியும், கமலும் வந்தால் அவர்கள் வழியில் அடுத்து அவர்கள் தம்பிகளும் அதே வழியில் பயணிப்பார்களே என்ற ஆசையில் வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. விமர்சனம் செய்பவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மனதில் தோன்றியதைக் கூறினேன், அவ்வளவுதான். இடைவெளி விழுந்தாலும் சினிமா நண்பர்கள் அந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறேன்" என்றார்.