Published on 23/08/2018 | Edited on 23/08/2018
நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேய்மழை பெய்திருக்கிறது கடவுளின் தேசமான கேரளாவில். காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடக்கும் மீட்புப் பணிகளே, நம்மைப் பதைபதைக்கச் செய்ய போதுமானதாக இருக்கின்றன. தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பொழிந்ததும், அதனால் அணைகள் அனைத்தும் நிரம்பியதும்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்குமான காரணமாக சொல்லப்படுகிறது.
மழை நிற்கட்டும் என்று காத்திருந்தவர்கள், வெள்ளம் வடிவதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. வெள்ளம் வடிந்த பின்னர்தான் புதிய பிரச்சனைகள் அந்த மக்களுக்காக காத்திருந்தன. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நானூறைத் தாண்டிவிட்டது. ஏராளமான வனவிலங்குகளும் செத்து மிதக்கின்றன. போதாக்குறைக்கு பல கோடிகளுக்கு பொருட்சேதமும் அடைந்திருப்பது கேரள மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. மழையால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீண்டுவர, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிவாரணம் தேவைப்படும் என கேரள அரசு கணக்குக் காட்டுகிறது.
முதலில் உள்துறை அமைச்சகம் 100 கோடியும், பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்ட பின் 500 கோடியும் ஒதுக்கி நிவாரணத்தை அறிவித்தனர். அதிதீவிர தேசியப் பேரிடர் என்று அறிவித்த பின்னரும், மிகச்சிறிய நிவாரணத்தோடு வாயை மூடிவிட்டது மத்திய அரசு. சென்னை பெருமழையின்போது சாதி, மத பேதங்களைக் கடந்து படர்ந்த நேசக்கரங்கள்தான், கேரளாவையும் துயரிலிருந்து தற்காலிகமாக தூக்கிவிட்டிருக்கின்றன. ஒருவர் துவண்டு நிற்கும்போது தோள் கொடுத்து தூக்கிவிடும் மனிதநேயம், ஒரு மாநிலமே எழுந்துநிற்க உதவிக்கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான நிவாரண நிதி கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு நாடுகள், கட்டார், மாலத்தீவுகள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும், நல்லெண்ண அடிப்படையில் மனமுவந்து உதவ முன்வந்துள்ளன. ஆனால், இந்த உதவியை ஏற்பதில் கொள்கை சிக்கல் இருப்பதாக முட்டுக்கட்டை போடுகிறது மத்திய அரசு. இதனை உறுதிசெய்யும் விதமாக தாய்லாந்து அரசின் தரப்பு, “இந்திய அரசு எங்கள் நிதியுதவியை ஏற்க மறுக்கிறது” என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது.
14 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு, வெளிநாடுகளிடம் இருந்து நிவாரண நிதி பெறுவதில் கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவந்ததைக் காரணமாக சொல்கிறது தற்போதைய மத்திய அரசு. 1991ல் ஏற்பட்ட உத்தர்காசி நிலநடுக்கம், 1993 லத்தூர் நிலநடுக்கம், 2001 குஜராத் நிலநடுக்கம், 2002 பெங்கால் புயல், 2004 பீகார் பெருவெள்ளம் என பல சூழல்களில், பல்வேறு இயற்கைப் பேரிடர் சமயங்களில் உலக நாடுகள் இந்தியாவிற்கு நிவாரண உதவிகளைத் தந்திருக்கின்றன. ஆனால், 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, உலகநாடுகளின் நிவாரண உதவியை மன்மோகன் அரசு ஏற்க மறுத்தது. அது இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு பொருளாதார இழுக்கு ஏற்படும் என்பதால், சொந்தமாகவே சரிசெய்து கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு உத்தர்காண்ட் நிலச்சரிவு ஏற்பட்டபோதுகூட, அமெரிக்கா 90 லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக சொன்னபோது, அதை இந்திய அரசு ஏற்கவில்லை. மாறாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இதற்குத் தேவையான தொகையை உலக வங்கி அல்லது ஏசியன் வங்கியில் இருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார். உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது மனமுவந்து உதவ நினைப்பவர்கள், என்.ஜி.ஓ.க்களின் மூலமாக உதவலாம் என்றாலும், பிற நாட்டு அரசுகளிடம் இருந்து வரும் உதவியை இந்தக் கொள்கை முடிவு நிராகரிக்கவே செய்கிறது.
ஆனால், 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை, மேற்சொன்னவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன்படி, தேவைப்பட்டால், உலக நாடுகளிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் சொல்லப்பட்டது. இதையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் குறிப்பிட்டு, உரிய சமயத்தில் நிவாரணம் கிடைக்க வழிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவுக்கு ஐக்கிய அரபு நாடுகள் தர முன்வந்த 700 கோடி ரூபாயைக் கொள்கைக் காரணங்களால் ஒருவேளை மத்திய அரசு நிராகரித்தால், அந்தத் தொகையை மத்திய அரசே தரவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.National Disaster Management Plan Chapter 9 on international cooperation accepts that in time severe calamity voluntary aid given by a foreign gov can be accepted. Still if Union Gov chooses to adopt a negative stance towards offer made byUAE gov they should compensate Kerala
— Thomas Isaac (@drthomasisaac) August 22, 2018
மிகப்பெரிய துயரில் சிக்கிக் கொண்டிருக்கும் கேரளாவிற்கு, எந்தவொரு சின்ன உதவியும் முக்கியத்துவமானது. அரசியல் உள்நோக்கங்களைத் தவிர்த்து, உரிய வகையில் இழப்பீடு கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பது அழுத்தமான வேண்டுகோளாக இருக்கிறது.