அதிமுக டிசைனே அப்படித்தான் என எப்படிச் சொல்லமுடியும்?
‘புதிதாகக் கட்சி தொடங்க வேண்டும்; முதலமைச்சராக வேண்டும்..’ என்ற எண்ணம் துளியும் இல்லாதவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், திமுகவுடன் பிணக்கு ஏற்பட்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடைய ரசிகர்கள், தாமரைக் கொடியேற்றி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏற்கனவே ‘அதிமுக’ என்ற பெயரில் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில், தன்னை இணைத்துக்கொண்டார். 1972ல், இப்படித்தான் அதிமுக என்ற கட்சி உருவானது. பிறகுதான், கட்சியின் கொள்கை ‘அண்ணாயிசம்’ என்று சொல்லப்பட்டு, திரைப்படங்களில் சோ போன்றவர்களால் கேலிக்கு ஆளானது. ஆனாலும், ஜெயலலிதாவை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்குவதற்கு எம்.ஜி.ஆரால் முடிந்தது.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஜொலித்தது, பின்னாளில், மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் தலைவர்கள் ஆவதற்கான தகுதிகளில் பிரதானமாக இருந்தது. சினிமா ஈர்ப்புள்ளவர்களாக இருப்பதாலோ என்னவோ, பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், அந்த நேரத்தில் யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரது தலைமையை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றனர். கொள்கைப் பிடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாததால், ‘தலைமை மீதான விசுவாசம்’ என்பதை, சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் செய்கின்றனர். இந்த நடைமுறை, அதிமுகவில் வாடிக்கையாகிப் போனது.
அரசியல்வாதியாக இருந்தாலும், தன்னை நல்லவராகவே வெளிப்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சீனியர்களின் உள்ளார்ந்த எதிர்ப்பை மீறி, 28 படங்களில் தன்னோடு இணைந்து நடித்த ஜெயலலிதாவை, கொள்கை பரப்புச் செயலாளராக கட்சியில் வலியத் திணித்தார். சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். தன்னை வளர்த்துவிட்டிருந்தாலும், ‘தனிப்பட்ட வாழ்க்கையில் தான் ஏமாற்றப்பட்ட’ மனக்குமுறலிலேயே ஜெயலலிதா இருந்தார். அந்த வன்மத்தை, எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது பகிரங்கமாகவே காட்டினார். அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி மூலம், எம்.ஜி.ஆருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு குடைச்சல் தந்தார். எம்.நடராஜனின் வழிநடத்துதலில், சசிகலா துணையோடு, எம்.ஜி.ஆரிடமிருந்து அதிமுக ஆட்சியைத் தட்டிப்பறிக்கும் வேலைகளிலும் இறங்கினார். ‘இத்தனை துரோகமா?’ என்று வெறுத்துப்போன எம்.ஜி.ஆர்., ‘அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவிடம் பேசக்கூடாது..’ என்று உத்தரவிட்டார்.
பின்னாளில் என்ன நடந்தது? அமரராகி 33 வருடங்கள் கடந்தபின்பும், எம்.ஜி.ஆரை பூஜித்துவரும் ரசிகர்களாகிய தொண்டர்கள்தான், அக்கட்சியின் பலமான அஸ்திவாரம். ஆனாலும், அந்திமக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவுக்கு மதிப்பில்லாமல் போனது. எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தங்களின் ஒரே தலைவி ஜெயலலிதாதான் என்று அதிமுகவினர் கொண்டாடினர்.
‘எம்.ஜி.ஆர்தானே அதிமுக! அதிமுகதானே எம்.ஜி.ஆர்.! எம்.ஜி.ஆர். மீதான விசுவாசம் எங்கே போயிற்று? எம்.ஜி.ஆருக்கே பிடிக்காமல்போன ஜெயலலிதாவை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளை அக்கட்சியினரிடம் அடுக்கினால், ‘எங்ககிட்டயேவா?’ என்று திருப்பிக் கேட்பார்கள். ஏனென்றால், அவர்கள் அப்படித்தான்!
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும்கூட புரியாத புதிராகவே இருந்துள்ளன. தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, ஒருவிதத்தில் பக்கபலமாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், சேலம் கண்ணன் போன்றோரை அவமதிப்புக்கு உள்ளாக்கி ஓரம்கட்டினார். இக்கட்டான தருணங்களில், தனக்கு பாதுகாப்பாகவும் ஆலோசகராகவும் இருந்து ‘உயர்த்தியவர்’ என்றாலும், வேண்டாதவர் ஆகிவிட்டதால், ம.நடராசனை, போயஸ் கார்டன் பக்கமே தலைகாட்டவிடாமல் விரட்டியடித்தார். அதேநேரத்தில், அவருடைய மனைவி சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக தன்னுடனே வைத்துக்கொண்டார். சசிகலாவும்கூட, இரண்டு தடவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்தான்.
தலைமையிடமே, இத்தனை குழப்பங்களும், நடவடிக்கைகளில் குளறுபடிகளும் இருக்கும்போது, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ‘ஒரே நிலைப்பாடு’ உள்ளவர்களாக எப்படி இருக்கமுடியும்?
அதிமுக யாருக்குச் சொந்தம்? - முடிவுகட்டும் தேர்தல்!