நக்கீரனில் கடந்த ஆக. 16-18 தேதியிட்ட இதழில் ‘ஆடியோவில் அம்பலமான மின்வாரிய அலுவலர்கள்’ என திருச்சி மின் வாரியத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியில், திருச்சி மலைக்கோட்டை மின் வாரியத்தில் உள்ள ஒரு ஏ.டி, ஏ.இ. உள்ளிட்ட அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, அவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாம் விரிவாக எழுதி இருந்தோம்.
இந்த செய்தி வெளிவந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளனர். அதில் டி.இ.யாக பணியாற்றும் சண்முகசுந்தரம் என்ற துண்டு சீட்டு சண்முகசுந்தரம் தான் இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்த மலைக்கோட்டை மின் வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் ரங்கசாமி, மலைக்கோட்டை பிரிவு மின்வாரிய இயக்கலும் காத்தலும் உதவி மின் பொறியாளர் சுப்புலட்சுமி, மெயின் கார்டு கேட் பிரிவு மின்வாரிய இயக்கலும் காத்தலும் மற்றும் பொறுப்பு இயக்கலும் காத்தலும் சிந்தாமணி பிரிவு அலுவலக உதவி மின் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் மின்வாரிய டி.இ. சண்முகசுந்தரம் மூலம் தொடர்ந்து நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், அதைச் செய்ய மறுத்தால் உடனடியாக தற்காலிக பணியிட மாற்றம் செய்வது என்ற அத்துமீறல்கள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பொதுவாக மின் இணைப்புகளில் வீட்டு இணைப்போ, வணிகத் தொடர்பான பெரிய நிறுவனங்கள் இணைப்போ எதுவாக இருந்தாலும், நுகர்வோர் விண்ணப்பங்கள் அனைத்தும் அவருடைய பார்வைக்குச் செல்லும். அவர் ஒரு துண்டு சீட்டில் பென்சிலில் இணைப்புக்கு தகுந்தாற்போல் எவ்வளவு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். அதை அவருக்கு கீழே உள்ள ஏ.இ, உள்ளிட்டவர்கள் நுகர்வோரிடம் பெற்றுத் தந்தால் தான் அந்த விண்ணப்பம் குறித்து யோசிக்கவே ஆரம்பிப்பார்.
இதில் வீட்டு இணைப்பாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் முதல் வீட்டைப் பொறுத்து ரூ. 1 லட்சம் வரையிலும், வணிக இணைப்பாக இருந்தால், ரூ. 3 லட்சம், பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களாக இருந்தால் ரூ. 5 லட்சம் மற்றும் அதற்குக் கூடுதலாகவும் வாங்க வேண்டும். விலையை அவர் தான் நிர்ணயம் செய்வார்.
ஒரு இணைப்பு கேட்டு நுகர்வோர் விண்ணப்பித்தால், அதிகபட்சம் 3 மாத காலத்திற்குள் விண்ணப்பங்களின் வரிசைப்படி அவர்களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் வருடக் கணக்கில் காத்திருக்கும் நுகர்வோர்களும் உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் அதிகாரி கேட்ட தொகையைக் கொடுக்காமல் இருக்கிறார் என்பதால், அவருடைய விண்ணப்பத்தினை கிடப்பில் போட்டுவிடுவார்.
இவர் நிர்ணயிக்கும் தொகையை வாங்கிக் கொடுக்க விரும்பாத ஏ.இ.க்களும் இருக்கிறார்கள். அவர்களை டெப்டேசன் என்ற பெயரில் தூக்கி வெளியே அடித்துவிட்டு, அவர் சொல்வதைக் கேட்கும் ஏ.இ.யை பக்கத்தில் வைத்துக்கொள்வார். இவ்வளவு அராஜகம் செய்யும் டி.இ.யால் தான் எங்களுடைய பெயரும் கெட்டுப் போச்சு. இப்பிரச்சனையில் அவர் வெளியே தெரியாமல் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கிறது. ஆனால் மொத்த பிரச்சனையும் ஆரம்பிப்பது டி.இயிடம் இருந்து தான். எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நாங்கள் அவரால் நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்கிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட டி.இ. சண்முகசுந்தரத்திடம் நாம் பேசினோம். அவர், “எல்லா இடத்திலும் மேல் இடத்திற்குப் பணம் கொடுப்பதாகத் தானே சொல்வார்கள். அதேபோல் தான் இதிலும் நடந்துள்ளது. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்தேன். அவர்கள் எல்லாம் இன்று என் பக்கமே திரும்புகிறார்களா? இவர்களின் இந்தச் செயல்களின் காரணமாகவே தற்போது ஏ.இ.க்களுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு ஏ.டிக்களுக்கு அதிகாரம் கூட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.