ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வரும் வேளையிலும் ஜெயலலிதா சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் ஒருபக்கம் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கின்றது. நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசுகளாக உங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பிற்குப் பிறகு அரசு என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?
உலகம் முழுவதும் இந்தக் கரோனா தொற்றுப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாங்கள் செய்ய வேண்டிய சட்டரீதியான முயற்சிகள் தற்போது இந்தக் கரோனா காரணமாகத் தடை பட்டுள்ளது. எல்லாருக்கும் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போல எங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அதில் காட்டவேண்டிய அக்கறையை இந்த விஷயத்தில் ஏன் காட்டுகிறது என்று தெரியவில்லை. எனவே கரோனா விவகாரத்தில் அனைவரின் ஒத்துழைப்பு என்பது மிக முக்கிய ஒன்றாக இருக்கின்றது.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அவசரத்துக்கு என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னுடயை மனசாட்சி சொல்கிறது அவர்கள் தேர்தலுக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று. அ.தி.மு.க. வாக்குகளை அவர்கள் பெற வேண்டும். இதன் காரணமாக அவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்போது அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகின்றது. அப்படி இருக்கின்ற நிலையில் கட்சித் தொண்டர்களைத் திருப்திபடுத்தும் விதமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதையும் தாண்டி அந்த கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றது. வருகின்ற தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்ற குழப்பம் பெரிய அளவில் இருக்கின்றது. இதை எல்லாம் மறைத்துத் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க இந்த மாதிரியான வேளைகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
செல்வி ஜெயலலிதாவின் வாரிசுகளாக உங்களையும், உங்கள் தம்பி தீபக்கையும் அறிவித்துள்ளது. சொத்துகளைத் தவிர வேறு எந்த மாதிரியாகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?
நீதிமன்றம் கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது ஒரு சட்டரீதியான வெற்றியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அந்தக் குடும்பத்தில் நாங்கள் பிறந்திருக்கிறோம். அதனால் அந்தப் பந்தம் எங்களுக்குள் இயற்கையாகவே இருந்துகொண்டு இருக்கின்றது. ஆனால் அதனைச் சட்டரீதியாக ஒரு போராட்டமாக நடந்த வேண்டிய அவலநிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையாக எங்களுக்குக் கிடைக்கின்ற நீதி சட்டப்போராட்டத்திற்குப் பிறகு தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ளது.