நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகினார். அதற்கு முன்பாக மோடி குஜராத்தில் 13 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அப்போது பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எல்.கே.அத்வானி மோடியை குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக்கொள்ளுமாறு கூறி பொறுப்பாளராக நியமித்தார்.
நரேந்திர மோடியின் செயல்திறன் அவரை கவர்ந்தது. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி பாஜக தலைமைக்கு அதிருப்தியை உண்டாக்க, அந்த ஆண்டில் அக்டோபர் 7ஆம் தேதி நரேந்திர மோடி முதன் முறையாக குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக பாஜகவால் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மணிநகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதுதான் முதன் முறையாக நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது.
அடுத்து 22ஆம் தேதி டிசம்பர் 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மணிநகரில் போட்டியிட்ட நரேந்திர மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சரானார். இதையடுத்து 2012அம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர் நான்காவது முறையாக முதலமைச்சராகினார். குஜராத்தின் வளர்ச்சி பிம்பம் இந்தியா முழுவதும் மோடியை அறியச் செய்தது. இதனால் பாஜகவால் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் மோடி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். ஆனால், அவர் படுதோல்வியடைந்தார். 2019 தேர்தலில் வாரணாசியில் வெற்றியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார். மீண்டும் பிரதமராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.